ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் தவிர்த்து, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், சிவகுமார் முருகேசன் எழுத்தில், ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையிலும், அதில் பேசப்பட்ட பாலின சமத்துவம், ஆணாதிக்கம் மற்றும் நவீன குடும்ப அமைப்புகள் குறித்த விவாதங்கள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இத்திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான விவாதத்தை சுவாரசியமான படைப்பாக வழங்கியதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இப்படத்தின் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேலை நேரில் அழைத்து கவுரவித்துள்ளனர். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக இப்படத்தை அவர் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறப்பான அங்கீகாரம் குறித்து ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளது. "'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படத்தைப் பாராட்டி, எங்கள் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அவர்களுக்கு கௌரவம் அளித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த அங்கீகாரத்திற்கும், எங்கள் படக்குழுவினருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்திற்கும் நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் தவிர்த்து, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழமைவாத எண்ணங்கள் கொண்ட கணவனுக்கும் (ரியோ), முற்போக்கு எண்ணங்கள் கொண்ட மனைவிக்கும் (மாளவிகா) இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும், பிரிவையும் நகைச்சுவை கலந்து எதார்த்தமாகச் சொன்ன கதைக்களமே இப்படத்தின் சிறப்பு. விமர்சகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், நவீன தம்பதிகளின் உறவுமுறையை மிக நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தது.