சினிமா செய்திகள்

அடுத்தடுத்து வெளியாகும் சூப்பர் ஹீரோ படத்தின் அப்டேட்கள்!

இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால், இதற்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட கதைக் களங்களுக்கும், சூப்பர் ஹீரோ கதைகளுக்கும் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

மிரட்டலான வில்லன்

விக்னேஷ் வேணுகோபால் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து பிரபல நடன இயக்குநரான சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குறிப்பாக, 'பரிமளா அண்ட் கோ' படத்தைத் தொடர்ந்து சாண்டி இந்தப் படத்திலும் மிரட்டலான வில்லனாக களம் இறங்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால், இதற்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' மற்றும் 'டிக்கிலோனா' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.எஸ். சினிஷ், தனது 'சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி' (Soldiers Film Factory) சார்பில் இந்த 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

தொழில்நுட்ப குழு

'ஒன்ஸ் மோர்' படத்திற்குப் பிறகு அர்ஜுன் தாஸுடன் இணைந்து பணியாற்றும் ஹேஷம் அப்துல் வஹாப், 'சூப்பர் ஹீரோ' படத்திற்கு இசையமைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார் . மேலும், 'சூப்பர் ஹீரோ' படக்குழுவில் ஒளிப்பதிவாளர் சத்யா வி, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், தயாரிப்பு வடிவமைப்பாளர் சக்தி வெங்கட்ராஜ் எம் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் திலீப் சுப்பராயன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த அப்டேட்

ஒவ்வொரு குழந்தையும் சூப்பர் ஹீரோக்கள் நிஜம் என்று நம்பி வளர்கிறார்கள், அவர்கள் நம்புவது உண்மைதான்! என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.