சினிமா செய்திகள்

வரலாறு படைக்கும் கூட்டணி... பிரியதர்ஷனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் லால் ஏட்டன்

இயக்குநர் பிரியதர்ஷின் முதல் மற்றும் நூறாவது படத்தில் நடிக்கும் மோகன்லால்.

மாலை மலர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனுடன் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார். இப்படம் இயக்குநர் பிரியதர்ஷனின் 100வது படமாகும். 1984-ல் வெளியான பிரியதர்ஷனின் முதல் படமான 'பூச்சக்கோறு மூக்குத்தி' என்ற படத்திலும் மோகன்லால்தான் கதாநாயகன்.

ஒரு இயக்குநரின் முதல் மற்றும் நூறாவது படங்கள் இரண்டிலும் ஒரே நடிகர் நடிப்பது இந்திய சினிமாவில் இதுவே முதல்முறை.

மலையாள திரையுலகில் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படும் இவர்கள் கடைசியாக மரக்கார் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்நிலையில் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாதநிலையில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மோகன்லால்,

“சில மைல்கற்கள் ஒரு தனி மனிதனுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அந்தப் பயணத்தை அருகிலிருந்து பார்த்த அனைவருக்கும் அவை சொந்தம். எனது அன்பிற்குரிய பிரியன் (பிரியதர்ஷன்) தனது 100-வது திரைப்படத்தில் கால்பதிக்கிறார். இது எனக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மோகன்லால், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து த்ரிஷ்யம் 3 படமும் வெளியாக உள்ளது.