கோடை விடுமுறையையொட்டி திரைப்படங்களை வெளியிட திட்டமிடப்படும். அந்த வகையில், மே மாதம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ படம் அடுத்த மாதம் (மே) முதல் வாரத்தில் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. தணிக்கை சான்றிதழ், வழக்கு, தேர்தல் மற்றும் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னதாக இணையத்தில் வெளியானது என பிரச்சனைகளை சந்தித்த ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் வெளியாவது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகி உள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க, பார்த்திபன், ராதிகா, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ம் தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் சில காரணங்களால் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் அடுத்த மாதம் 14-ந்தேதி ‘கருப்பு’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் விஜய், விக்ரம், சூர்யா படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.