இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் விது, பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியாகி, தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் '29'. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரீத்தி அஸ்ரானி (விஜயலட்சுமி என்ற 'விஜி' கதாபாத்திரம்), கதையைக் கேட்டு சில நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ரத்னகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், "பிரீத்தி அஸ்ரானிக்கு இக்கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சில நெருக்கமான காட்சிகளால் நடிக்கத் தயங்கினார். நான் அவரிடம் 'ஆடை' படத்தில் இதுபோன்ற காட்சிகளை அழகியல் மாறாமல் கையாண்டதை கூறி சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், அவர் உடனடியாக படத்திலிருந்து விலகுவதாகக் கூறினார். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அவரது விருப்பத்தை ஏற்று அந்த நெருக்கமான காட்சியை மாற்றி, ஒரு நடனப் பாடலாக ('பொல்லாத ஆசைகள்') மாற்றியமைத்தோம். 'நோ' சொன்னதற்கு நன்றி பிரீத்தி" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இயக்குனரின் பதிவை தொடர்ந்து, இதற்குப் பதிலளித்துள்ள பிரீத்தி அஸ்ரானி, "ஒரு நடிகையாக எனது கேள்விகளையும், கருத்து வேறுபாடுகளையும் கேட்டு, அதற்கு மதிப்பளித்து விவாதிப்பதற்கான சுதந்திரமான சூழலை உருவாக்கிக் கொடுத்ததற்கு நன்றி சார். அந்த காட்சியை இவ்வளவு அழகாக மாற்றியமைத்ததற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என நன்றியோடு பதிவிட்டுள்ளார்.