சென்னையில் 'யுவர் பேக்கர்ஸ் பிளே' என்ற புதிய ஓடிடி டிஜிட்டல் தளத்தின் அறிமுக விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திரைப்படச் சங்கத் தலைவர் மற்றும் பிரபல இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி, தற்போதைய தமிழ் சினிமாவின் நிலைமை மற்றும் ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்துத் தனது கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
விழாவில் பேசிய ஆர்.கே.செல்வமணி, திரையரங்குகளைப் போலவே ஓடிடி தளங்களும் சினிமாவுக்கு ஒரு முக்கியத் தூணாகவே உருவெடுத்தன என்று குறிப்பிட்டார். ஆரம்பக் காலத்தில் திரைப்படங்களுக்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்த ஓடிடி நிறுவனங்கள், தற்போது தமிழ் சினிமாவையே முழுமையாகக் கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்துவிட்டதாகச் சாடினார். தொடக்கத்தில் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வாங்கி வந்த ஓடிடி நிறுவனங்கள், இப்போது படங்களைக் கொள்முதல் செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டன என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், தற்போது படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ முடிவு செய்ய முடியாது என்று கூறினார். ஓடிடி நிறுவனங்களே ஒரு படத்தின் ரிலீஸ் தேதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் எந்தவொரு முன்னணி கதாநாயகனாலும் கூடத் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியைத் சுயமாக முடிவு செய்ய முடியாத அவலநிலை நீடித்து வருகிறது.
திரையரங்குகளில் படம் வெற்றி பெறலாம் அல்லது தோல்வி அடையலாம், ஆனால் தற்போது தரமற்ற பல படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்கள் தயாரிப்பு பணிகள் முடிந்தும் வெளியாக முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதில் குறைந்தது 200 நல்ல தரமான திரைப்படங்களாவது இருக்கும் என்றும், அவற்றை அடையாளம் கண்டு வாங்கி வெளியிட புதிய ஓடிடி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தமிழில் புதிய ஓடிடி தளம் தொடங்கப்பட்டிருப்பது திரையுலகிற்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.