தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 8-ந்தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மூத்த மற்றும் முன்னணி திரைப்பட, நாடக நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.
நடிகர்-நடிகைகள் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கு வசதி அளிக்கும் விதமாக நடிகர் சங்கத்தின் வேண்டுகோள்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சினிமா படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர் சங்க பொதுக்குழு, சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடக்கிறது. இதில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழுவில் பங்கேற்கும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.