சினிமா

சினிமா பைனான்சியர் போத்ரா மீண்டும் கைது

பிரபல பட அதிபரின் புகாரின்பேரில் சினிமா பைனான்சியர் போத்ரா மீது புதிய வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

சென்னை தியாகராயநகரில் வசிக்கும் ஓட்டல் அதிபர் செந்தில் கணபதியின் புகாரின் பேரில் கந்துவட்டி வழக்கில் பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவும், அவரது மகன்கள் ககன்போத்ரா, சந்தீப்போத்ரா ஆகியோரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ரூ.83½ லட்சம் கடன் தொகைக்கு ரூ.60 கோடி மதிப்புள்ள ஓட்டலை சொந்தம் கொண்டாடியதாக வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பிரபல பட அதிபர் சதீஷ்குமார் என்பவர், போத்ரா மீதும், அவரது மகன்கள் மீதும் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

ரூ.15 லட்சம் கடன் தொகைக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள சதீஷ்குமாரின் 2 பங்களா வீடுகளுக்கு சொந்தம் கொண்டாடியதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போத்ரா மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.

இந்த புதிய வழக்கில் போத்ராவும், அவரது 2 மகன்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதற்காக அவர்கள் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போத்ராவை புதிய வழக்கில் சிக்க வைத்துள்ள பட அதிபர் சதீஷ்குமார் 20-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். அவர் தயாரித்துள்ள ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘பரதேசி’ போன்ற படங்களுக்கு 9 விருதுகளை பெற்றுள்ளார்.

போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது இன்னொரு புதிய புகாரும் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில் ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.2¾ கோடி கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அதுகுறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

போத்ரா மற்றும் அவரது 2 மகன்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.