சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் முகன்சந்த் போத்ரா.
இவர், திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரிராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்தார். அதனால் கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து முகன்சந்த் போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டினால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் குற்றவியல் கோர்ட்டில் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு முகன்சந்த் போத்ரா தொடர்ந்து ஆஜராகவில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முகன்சந்த்போத்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மனுவில், ‘ஜார்ஜ் டவுன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு, நான் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும்போது, தான் ரஜினிகாந்தின் ரசிகன் என்று கூறினார். இதனால், இவரது கோர்ட்டில் வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று கூறி வேறு கோர்ட்டுக்கு வழக்கை மாற்றக்கோரி தலைமை மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை தலைமை மாஜிஸ்திரேட்டு நிராகரித்தார். இதற்கிடையில், வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகவில்லை என்று கூறி என் வழக்கை ஜார்ஜ் டவுன் குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் வேண்டுமென்றே இந்த வழக்கை தாக்கல் செய்து, பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்து, ரஜினிகாந்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்’ என்றார்.
இதற்கு போத்ரா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வருகிற பிப்ரவரி 5-ந்தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்று ரஜினிகாந்த் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.