சினிமா

கார்த்தி படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு தடை கேட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை சீர்மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்த பசும்பொன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். படத்தின் மூலம் கிடைக்கும் 50 சதவீத தொகையை சீர்மரபினர் சமுதாய மேம்பாட்டிற்கு செலவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க 2 வக்கீல்-ஆணையர்களை நியமிக்க வேண்டும். அதற்கான செலவுத்தொகையை மனுதாரர் ஏற்றுக்கொள்ள தயாரா? என்பதை கேட்டுத் தெரிவிக்க வேண்டும்’ என்று மனுதாரரின் வக்கீலுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

SCROLL FOR NEXT