இந்த கடத்தலில் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதனை முற்றிலுமாக மறுத்து வந்தார்.
பாவனாவை பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் ஒரு மெமரி கார்டில் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மெமரி கார்டு வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால் அதனை கடத்தல் கும்பல் மறைத்து வைத்திருந்தது. இதனையடுத்து அந்த மெமரி கார்டு எங்கு இருக்கிறது என்பது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கினர். இறுதியில் காவ்யா மாதவனின் கடையில் இருந்து மெமரி கார்டை போலீசார் கைப்பற்றினர். இதன் பின்னரே பாவனா கடத்தல் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.
பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், திலீப்புடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னரே கொச்சி போலீசார் திலீப்பை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனா கடத்தல் தொடர்பாக 13 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கேட்ட பல்வேறு கேள்விகள் திலீப்பை திணறடித்தன. இதன் மூலம் பாவனா கடத்தலின் பின்னணியில் திலீப் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் திலீப் நேற்று முன் தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திலீப் முதல் மனைவியான மஞ்சு வாரியாரை பிரிவதற்கு பாவனாவே காரணமாக இருந்ததாக கூறப்பட்டது. திலீப் - காவ்யா மாதவன் காதலை மஞ்சு வாரியாரிடம் பாவனா கூறியதால் தான் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக திலீப் நம்பினார். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே திலீப், ஆட்களை ஏவி பாவனாவை கடத்தியது வெட்ட வெளிச்சமானது. கைது செய்யப்பட்ட திலீப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவ்யா மாதவனை போலீசார் தேடிவருகிறார்கள்.
பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பிடம் மேலும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணி அளவில் திலீப் ஆலுவா சிறையில் இருந்து கொச்சி அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர்.
அதில் பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புக்கு முக்கிய பங்கு உள்ளது. சதிதிட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சதிதிட்டம் திருச்சூர், கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந் துள்ளது. அங்கெல்லாம் திலீப்பை அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அது குறித்தும் திலீப்பிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே 3 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் திலீப்பை வேனில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் பாவனா கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலிலோ அல்லது நாளையோ திலீப்பை, கொச்சியில் சதி திட்டம் நடந்ததாக கருதப்படும் இடங்களுக்கு போலீசார் அழைத்துச் செல்கிறார்கள். திருச்சூருக்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணை முடிவில் பாவனா கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
திலீப் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். அங்கமாலி கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே திலீப்பின் வக்கீல் ராம்குமார் திலீப்புக்கு ஜாமீன் கேட்டும் கோட்டில் மனுதாக்கல் செய்தார். இது உடனடியாக விசாரணைக்கு எடுத்துகொள்ள மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார். திலீப்புக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனுவை உடனடியாக ஏற்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார். இன்று பிற்பகலில் அதன் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.