டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் படம் ‘அருவி’.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கும், படத்தின் கதைக்கும், இந்த படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாகவே இருக்கின்றன. அதேநேரத்தில் படத்தின் இயக்குநர் அருண் பிரபுவை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு படம் பிரபலங்களிடையேயும், சாதாரண மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், படத்தின் இயக்குநரை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனை இயக்குநர் அருண் பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, `உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் @superstarrajini அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!'
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், இயக்குநர் சுசீந்திரன், கார்த்திக் நரேன், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் `அருவி' படத்தை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.