படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்கள் ரஜினிகாந்தை தொடுவதற்கும், பக்கத்தில் நின்று ‘செல்பி’ எடுப்பதற்கும், கைகுலுக்குவதற்கும் முண்டியடித்தனர். இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் சென்றனர். தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். ஆனாலும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடிக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியபடி இருந்தனர். அவர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தார்.
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ரஜினிகாந்த் தலையில் ‘குல்லா’ அணிந்து நடந்து செல்வது போன்ற காட்சிகளும் படமானது. அப்போதும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து குரல் எழுப்பியபடி ஓடினார்கள்.
தாதாவாக இருக்கும் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதுவது போன்ற ஆக்ரோஷமான சண்டை காட்சிகளையும் மும்பையில் படமாக்குகின்றனர். மும்பை படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்டமாக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.