சினிமா

பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் 'மைம்' கோபி

`மெட்ராஸ்', `மாரி', `கபாலி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் 'மைம்' கோபி பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்.

மாலை மலர்

குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் மக்களை கவர்ந்து வரும் மைம் கோபி, தற்போது பார்வையற்ற மாணவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது, பார்வையில்லாத 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச் சென்று, அவர்களின் விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக், மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார்.

ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து உணவு, விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து பின்னர் சென்னைக்கு திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மைம் கோபி கூறுகையில், "போன வருடம் ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்.. மகிழ்ச்சி மட்டுமே. வேறொன்றுமில்லை. நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்" என்றார்.