இப்படத்தில் மலையாள திரை உலகில் துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ளார். 'அபியும் அனுவும்' படத்தை குறித்து அதன் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி பேசுகையில், ''இது ஒரு புதுமையான, இதுவரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் ரிலீசாகும் பொழுது ரசிகர்கள் அறிவார்கள்.
மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பாதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின்னணி வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. ரிலீசுக்கான தகுந்த தேதியை முடிவு செய்யவுள்ளோம்.''