ஆட்டோமொபைல்

இந்தியாவில் ரெவோல்ட் ஆர்.வி. 400 முன்புதிவு துவக்கம்

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கியது.

மாலை மலர்

ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் வாகனமான ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் ஏ.ஐ. வசதி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இது விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

வெளியீட்டுக்கு முன் ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கியது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரெவோல்ட் மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அமேசான் வலைதளம் மூலம் ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்யலாம்.

முதற்கட்டமாக ரெவோல்ட் ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டெல்லியில் விற்பனைக்கு வரும், பின் என்.சி.ஆர்., பெங்களூரு, புனே, ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நான்கு மாதங்களில் விற்பனைக்கு வரும் என ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஆர்.வி. 400 மோட்டார்சைக்கிளில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் சாவி செருகும் அமைப்பிற்கு மாற்றாக பவர் ஆன் / ஆஃப் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கீலெஸ் பவர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ரெவோல்ட் ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த செயலி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. 

இந்த மோட்டார்சைக்கிளில் ஜியோ-ஃபென்சிங், பைக் லொகேஷன், மேப்ஸ், நேவிகேஷன், ரியல்-டைம் பைக் விவரங்களான ரேன்ஜ் மற்றும் ஸ்பீடு உள்ளிட்டவற்றை காட்ட டிஸ்ப்ளே பயன்படுகிறது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என்ற வகையில் இதன் பேட்டரி திறன் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.