இது புதுசு

517கி.மீ. ரேஞ்ச் வழங்கும் புது எம்.ஜி. எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

புதிய எம்.ஜி. டோமஹாக் மூன்றுவித வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் டோமஹாக் எஸ்.யூ.வி. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது . இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுக விலைகள், BaaS மற்றும் நேரடி கொள்முதல் திட்டங்களுக்கு முறையே ரூ. 13.99 லட்சம் மற்றும் ரூ. 19.50 லட்சம் எனத் தொடங்குகின்றன.

PHEV பதிப்பின் விலை, BaaS மற்றும் நேரடி கொள்முதல் திட்டங்களுக்கு முறையே ரூ. 21.80 லட்சம் மற்றும் ரூ. 25.70 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் விலைகள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள், இந்த மாடலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட் விற்பனைக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த மாடல் EV மற்றும் ICE ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் இருந்து தேர்வு செய்யலாம். இந்த காருக்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், EV மற்றும் PHEV வேரியண்ட்களுக்கான டெலிவரி செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை, புதிய டோமஹாக் மூன்று வரிசை எஸ்.யூ.வி.-யில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், குரோம் இன்செர்ட்களுடன் கூடிய புதிய கருப்பு கிரில், புதிய 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஃபாக் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2026 எம்.ஜி. டோமஹாக் ஐந்து இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட உள்ளமைப்புகளில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 256 வண்ண சுற்றுப்புற விளக்குகள், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட இன்ஃபினிட்டி மியூசிக் சிஸ்டம், வென்டிலேட்டெட் முன் இருக்கைகள், தானாக உள்ளிழுக்கும் மற்றும் மெமரி செயல்பாட்டுடன் கூடிய ஆறு வழிகளில் சரிசெய்யக்கூடிய மின்சார ஓட்டுநர் இருக்கை, பின்புற சன்ஷேடுகள், ஸ்லைடு மற்றும் சாய்வு வசதிகளுடன் கூடிய பின்புற இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 15.6-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

கனெக்ட்டெட் கார் அம்சங்கள்:

டோமஹாக் எஸ்.யூ.வி.யில் 80-க்கும் மேற்பட்ட கனெக்ட்டெட் கார் அம்சங்கள், 30-க்கும் மேற்பட்ட ஹிங்லிஷ் கட்டளைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ஐ-ஸ்வைப்+ ஜெஸ்டர் கண்ட்ரோல், 8.7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெசர்ட் ஸ்குவாட்ரன் இன்டீரியர் தீம், பவர்டு டெயில்கேட், டிரான்ஸ்பேரண்ட் சேஸிஸ் மற்றும் வீல் வியூ கொண்ட 360-டிகிரி கேமரா, V2L தொழில்நுட்பம் உள்ளது.

இத்துடன் பல்வேறு இன்-கார் மோட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ESP, TCS, HHC, EBD உடன் கூடிய ABS, EPB, லெவல் 2 ADAS மற்றும் ஆறு ஏர்பேக்குகள் அடங்கும். மேலும், இந்தியாவில் ஒரு காருக்கு முதல் முறையாக வழங்கப்படும் V2H தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்:

எம்.ஜி. ஹெக்டர் டோமஹாக் EV-யின் இன்ஜின், 69.2kWh LFP பேட்டரி பேக் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 517 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இது 201bhp மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த கார் 8.2 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது.

புதிய எம்.ஜி. ஹெக்டர் டோமஹாக்-இன் ஐ.சி.இ. (ICE) பதிப்பானது, 20.5kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர், என்ஏ (NA) பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இதன் மூலம் இது ஒரு PHEV வடிவில் கிடைக்கிறது. இந்த வெர்ஷன் 198bhp பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த கார் மின்சாரத்தில் மட்டும் 115 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும், எம்.ஜி. நிறுவனம் இந்த கார் 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என உறுதியளிக்கிறது.