கார்

Renault Duster | எல்லாமே விற்றாகி விட்டது... வந்ததும் சம்பவம் செய்த ரெனால்ட் டஸ்டர்

இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மாலை மலர்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யூ.வி. மாடல்- டஸ்டரை இந்திய சந்தையில் நேற்று (மார்ச் 17) வெளியிட்டது. புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல் ரூ. 10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வருகிறது. ஆர்.ஜி.எம். பிளாட்ஃபார்மில் உருவாகும் புதிய டஸ்டர் மாடல் முற்றிலும் புதிய டிசைன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார்- ஆதென்டிக், எவல்யூஷன், டெக்னோ, டெக்னோ பிளஸ் மற்றும் ஐகானிக் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த காருக்கான முன்பதிவுகள் கடந்த ஜனவரி மாத வாக்கில் ரூ. 21,000 கட்டணத்தில் தொடங்கின. இந்த நிலையில், முன்பதிவின் போது டஸ்டர் மாடலின் டர்போ வேரியண்ட்களை கிட்டத்தட்ட 91 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளதாக ரெனால்ட் தெரிவித்துள்ளது. மேலும், இந்த காரின் ஹைப்ரிட் வேரியண்ட் முழுமையாக விற்றுத்தீர்ந்ததாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய டஸ்டர் மாடல்- 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் என இருவித டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல், சி.வி.டி. ஆட்டோமேடிக் மற்றும் 6 ஸ்பீடு டி.சி.டி. என மூன்றுவித டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த வேரியண்ட் அறிமுகத்திற்கு முன்னதாகவே விற்றுத்தீர்ந்ததாக ரெனால்ட் அறிவித்து இருக்கிறது. ரெனால்ட் டஸ்டர் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS, ஆறு ஏர்பேக், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியன்ட் லைட்டிங், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ-ஹோல்டு போன்ற வசதிகள் உள்ளன.

இந்திய சந்தையில் புதிய ரெனால்ட் டஸ்டர் மாடல்- ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா சியெரா, மாருதி விக்டோரிஸ், ஸ்கோடா குஷக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.