கார்

2 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் இந்தியாவில் 2-ஆவது உற்பத்தி ஆலையை அமைக்கும் கியா இந்தியா

இந்த ஆலையின் மூலம் அதன் மொத்த உற்பத்தி ஆறு லட்சம் யூனிட்களாக உயரும்.

கியா இந்தியா சமீபத்தில் ஆந்திரப் பிரதேச அரசுடன் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முதலீடு அனந்தபுரத்தில் அமையவுள்ள அதன் இரண்டாவது ஆலைக்கானது. இந்த ஆலை, ஐ.சி. என்ஜின் மற்றும் மின்சார வாகனம் (EV) ஆகிய இரண்டு வகைகளிலும் வரவிருக்கும் மாடல்களை உற்பத்தி செய்யும்.

கியாவின் இரண்டாவது அனந்தபூர் ஆலை, கார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் விநியோகஸ்தர்களுக்காக 465 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதன் ஆண்டு உற்பத்தி திறன் இரண்டு லட்சம் யூனிட்களாக இருக்கும். தற்போதுள்ள ஆலை 945 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, அதன் ஆண்டு உற்பத்தித் திறன் 4.3 லட்சம் யூனிட்கள் ஆகும். இந்த ஆலையின் மூலம் அதன் மொத்த உற்பத்தி ஆறு லட்சம் யூனிட்களாக உயரும்.

இந்த இரண்டு ஆலைகளும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி மாடல்களுக்கான உற்பத்தி மையங்களாக செயல்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சொரெண்டோ உள்ளிட்ட தற்போதைய மாடல்கள் முதல் ஆலையை பயன்படுத்தும் நிலையில், இரண்டாவது ஆலையின் வருகை இந்தியாவிற்கு மேலும் பல மாடல்களை கொண்டு வரக்கூடும். இதில் புதிய ஹைப்ரிட் கார்களான செல்டோஸ் மற்றும் கார்னிவல் போன்றவையும் அடங்கும். மேலும், ஸ்போர்டேஜ் மற்றும் டெல்யூர்ட் போன்ற மாடல்களும் இங்கு வருவதற்கு வாய்ப்புள்ளது.

தலைமை செயல் அதிகாரி பேட்டி:

இந்த மூலோபாய நகர்வை முன்னிலைப்படுத்தி, கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான குவாங்கு லே கூறியதாவது, "கியாவின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்கு இந்தியா மையமாக விளங்குகிறது. அனந்தபூரில் நாங்கள் எங்கள் செயல்பாடுகளை தொடங்கியதில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்கள் பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.

எங்களின் இரண்டாவது உற்பத்தி ஆலை ஒரு குறிப்பிடத்தக்க புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. இது, ஐ.சி. என்ஜின் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதோடு, வாடிக்கையாளர் தேவைகளுக்கு அதிக வேகத்துடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் பதிலளிக்கும் எங்கள் திறனை வலுப்படுத்துகிறது.

எங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குள் நுழையும் வேளையில், இந்தியாவின் வாகன சூழல் அமைப்புக்கு பங்களிப்பதிலும், இங்கு நாங்கள் உருவாக்கியுள்ள வலுவான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது, 'மேட்-இன்-இந்தியா' என்ற எங்கள் முத்திரையை மேலும் விரிவுபடுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு சேவை செய்யும் எங்கள் திறனை வலுப்படுத்தும்," என்றார்.

SCROLL FOR NEXT