கியா இந்தியா, கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி மாடலில் இரண்டு புதிய என்ட்ரி லெவல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட சீரிசில், HTE (EX) மற்றும் HTE (O) டிரிம்களில் DCT உடன் கூடிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும், HTE (O) டிரிம்மில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 158bhp பவர் மற்றும் 253Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
டீசல் மாடலைத் தேர்வு செய்பவர்களுக்கு, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 114bhp பவர், 250Nm டார்க் உற்பத்தி செய்கிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல்களில், மோஷன் சென்சார் கொண்ட ஸ்மார்ட் கீ, பட்டன் ஸ்டார்ட், டிரைவ் மோட்ஸ், EPB மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE O பெட்ரோல் - ரூ. 14.66 லட்சம்
கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE EX பெட்ரோல்- ரூ. 15.21 லட்சம்
கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE O டீசல்- ரூ. 15.81 லட்சம்
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த கியா இந்தியாவின் விற்பனை பிரிவின் மூத்த துணை தலைவர் அதுல் சூட், “இந்திய வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடப் பயணங்களில் அதிக சௌகரியத்தையும் வசதியையும் விரும்புவதால், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் அவர்களுக்கு ஒரு முக்கியத் தேர்வாக மாறி வருகின்றன.
கேரன்ஸ் கிளாவிஸ் வேல்யூ டிரிம்களில் புதிய ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்கள் இரண்டிலும் இந்த வசதியை ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு நாங்கள் கிடைக்கச் செய்கிறோம்.
இந்த விரிவாக்கம், மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கியாவிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பிரீமியம் அனுபவம், நடைமுறைப் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், அதிக தேர்வுகளை வழங்கும் எங்களின் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது” என்றார்.