சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. டீசரில் ஸ்கூட்டர் பற்றிய அதிக விவரங்கள் இல்லை என்ற போதிலும் இது ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.
டீசரில் ஸ்கூட்டரின் முன்புற ஹெட்லைட் நிழல் போன்று காட்சியளிக்கிறது. இதில் இந்த வாகனம் மேக்சி ஸ்கூட்டராக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. இதன் தோற்றம் கிட்டத்தட்ட சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் டுவின் ஹெட்லைட், எல்.இ.டி. செட்டப் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகிறது.
சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை தற்போது அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது சற்றே பெரிய 150சிசி மாடல் அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்குமோ என்றும் எண்ண தோன்றுகிறது. ஒருவேளை இது 150சிசி மாடலாக இருக்கும் பட்சத்தில் இது யமஹா ஏரோக்ஸ் 155, ஹீரோ சூம் 160 மற்றும் டி.வி.எஸ். என்டார்க் 150 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.