யமஹா நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக ஏர்பேக் வைத்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. மூன்று சக்கரங்களை கொண்ட யமஹா டிரைசிட்டி 300 மேக்ஸி ஸ்கூட்டர் ஏர்பேக் சிஸ்டம் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உலகின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஏர்பேக் சிஸ்டம் வழங்குவதற்காக யமஹா நிறுவனம் ஆட்டோலிவ் உடன் கூட்டணி அமைத்தது. அதன்படி இந்த ஸ்கூட்டரின் முன்புற அப்ரானில் ஹேன்டில்பார்களின் கீழ் ஏர்பேக் சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டர் முன்புற வாக்கில் விபத்தில் சிக்கும் போது இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் ஹேன்டில்பார் மற்றும் இதர உறுதியான பாகங்கள் மீது மோதாமல் இருக்க செய்யும்.
இந்த ஸ்கூட்டரில் உள்ள ஏர்பேக் சிஸ்டம் இருசக்கர வாகனங்களில் மட்டும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஏர்பேக் வழங்கப்பட்டு இருப்பதால் ஸ்கூட்டரில் இடவசதி குறையவோ அல்லது வழக்கமான இயக்கத்திலோ எந்த பாதிப்பும், மாற்றமும் இருக்காது என யமஹா தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஏர்பேக் இல்லாத வெர்ஷன் முன்புறத்தில் சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள பெட்டி போன்ற அமைப்பு வழங்கப்படுகிறது.
டிரைசிட்டி 300 மாடல் யமஹாவின் லீனிங் மல்டி-வீல் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 292சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் யூரோ 5+ விதிகளுக்கு பொருந்தும் சான்று பெற்றுள்ளது. இது முந்தைய மாடலை விட 800 கிராம் வரை எடை குறைவாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மேம்பட்ட 2026 யமஹா டிரைசிட்டி 300 மாடலில் ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் ஆல்-எல்.இ.டி. லைட்டிங், 4.2 இன்ச் கலர் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஸ்டிரீட் கிராஸ் செயலி மூலம் கார்மின் இன்டகிரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் புதிய டிரைசிட்டி 300 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வருகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் விற்பனைக்கு வருவது கேள்விக்குறியான விஷயம் தான்.