டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் 2026 ரேடியான் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேடியான் மாடலின் தொடக்க விலை ரூ. 67,100 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடலுக்கு மேலே உள்ள டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க் மாடல்களின் விலை முறையே ரூ. 70,100 மற்றும் ரூ. 73,100 ஆகும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான டி.வி.எஸ். ரேடியான் பல அப்டேட்களைப் பெற்றுள்ளது. இதில் புதிய எல்.இ.டி. லைட்கள், திருத்தப்பட்ட வண்ண தேர்வுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இது முந்தைய மாடலில் இருந்த அதே என்ஜின் மற்றும் இயந்திர பாகங்களை தக்க வைத்து கொண்டுள்ளது.
புதிய எல்.இ.டி. ஹெட்லைட்டில் ஒருங்கிணைந்த டே-டைம் ரன்னிங் லைட் (DRL), எல்.இ.டி. டெயில் லைட் மற்றும் இரு முனைகளிலும் எல்.இ.டி. இன்டிகேட்டர்களை பெற்றுள்ளது. பின்புற லைட்-இல் ஆறு செங்குத்து லைட்டிங் இடம்பெற்றுள்ளன, அதே சமயம் DRL ஆனது முன்பக்கத்திற்கு ஒரு மாற்றியமைக்கப்பட்ட தோற்றத்தை அளிக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் புதிய நிறம் மற்றும் மாற்றப்பட்ட கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளன. பேஸ் வேரியன்ட் கருப்பு மற்றும் சிவப்பு, மற்றும் கருப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. டிஜி டிரம் வேரியன்ட் கருப்பு மற்றும் சிவப்பு, மற்றும் கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிஜி டிஸ்க் வேரியன்ட் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் கிடைக்கிறது. தற்போதுள்ள சிவப்பு மற்றும் கருப்பு இரட்டை வண்ண திட்டம், டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க் வேரியன்ட்களில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
இந்த மாற்றங்களைத் தவிர, ரேடியான் அதன் பழக்கமான பயண மோட்டார்சைக்கிள் வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் ஒற்றை இருக்கை, பின்புற லக்கேஜ் ரேக், 18-அங்குல அலாய் வீல்கள் மற்றும் கிராஷ் கார்டுகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
2026 டி.வி.எஸ். ரேடியான் பைக்கிற்கு, 8.08 bhp பவர் மற்றும் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும் 109.7cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் டி.வி.எஸ்.- இன் 'கிளைடு த்ரூ டெக்னாலஜி' (GTT) உள்ளது, இது குறைந்தபட்ச த்ராட்டில் உடன் குறைந்த வேகத்தில் மோட்டார்சைக்கிள் செல்ல உதவுகிறது.
டிஜி வேரியன்ட்களில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இடம்பெற்றுள்ளது, அதே சமயம், புதுப்பிக்கப்பட்ட இந்த வரிசையில் முன்பக்க டிஸ்க் பிரேக்கைப் பெறும் ஒரே வேரியன்ட் டிஜி டிஸ்க் ஆகும்.