கைனடிக் நிறுவனம், தனது புகழ்பெற்ற DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. புதிய DX+ 3.1 kWh மாடல், அன்றாட பயணங்களை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் இப்போது 3.1 kWh LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 132 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் (IDC) வழங்கும் என கூறப்படுகிறது. நடைமுறையில் எதிர்பார்க்கப்படும் ரேன்ஜ் சுமார் 105–110 கி.லோமீட்டர்களாக இருக்கும் என்று கைனடிக் கூறுகிறது.
ஹப்-இல் பொருத்தப்பட்ட BLDC மோட்டாரில் இருந்து 3.8 kW பீக்-பவர் பெறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ரேன்ஜ் மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும், K-கோஸ்ட் டெக், வேகத்தை குறைக்கும்போது ஆற்றலை மீட்டெடுக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை வழங்குகிறது.
DX+ மாடல், அசல் கைனடிக் DX-இன் முழு-உலோக பாடியை தக்க வைத்து கொண்டுள்ளது, ஆனால் ரிவர்ஸ் வசதியுடன் கூடிய பார்க் அசிஸ்ட், ஈஸி சார்ஜ், டெலிமேட்டிக்ஸ் மற்றும் IP67 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்பட நவீன அம்சங்களை சேர்த்துள்ளது. இது குயிக் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, சுமார் மூன்று மணி நேரத்தில் 0–80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது.
புதிய வேரியண்டில் பயன்பாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் இருக்கைக்கு அடியில் 37 லிட்டர் ஸ்டோரேஜ், 165 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் இரு முனைகளிலும் 12-இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதில் உள்ளன. முன்பக்கத்தில் 220 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 130 மில்லிமீட்டர் டிரம் மூலம் பிரேக்கிங் கையாளப்படுகிறது.
கைனடிக் DX 3 kWh மாடலின் விலை ரூ. 1.19 லட்சம், அதே சமயம் DX+ 3.1 kWh மாடலின் விலை ரூ. 1.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். DX+ மாடல் பிளாக், சில்வர், புளூ, வைட் மற்றும் ரெட் என ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது, அதே சமயம் DX மாடலில் பிளாக் மற்றும் சில்வர் ஆகிய விருப்பங்கள் உள்ளன.
கைனடிக் நிறுவனம், DX+ மாடலுக்கு ரூ. 3,000 சலுகை மற்றும் ரூ. 8,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட பண்டிகைக்கால சலுகைகளையும் வழங்குகிறது.