ராசிபலன்

2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். அடமான நகை மற்றும் சொத்துக்களை மீட்டு மகிழ்வீர்கள்.

தனுசு

விவேகத்துடன் செயல்பட வேண்டிய நேரம்.ராசிக்கு குரு சுக்கிரன் மற்றும் சனியின் பார்வை உள்ளது. திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். கடன் சுமையை குறைக்க புதிய வழிகள் தென்படும். அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற போகும் ராசி அதிபதி குருவின் பார்வை சனியின் மேல் பதியப் போவதால் அர்த்தாஷ்டம சனியினின் தாக்கம் குறையும். சிலர் வீடு, நிலம் வாகனம், தங்கம் போன்ற வகையில் சுப முதலீடு செய்வீர்கள். நோய் அகல மருத்துவர் ஆலோசனை கை கொடுக்கும்.

அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதி உதவி கிடைக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வெளிவட்டார நட்புகள் கிடைக்கும். தேவையற்ற எதிர்பாலின நட்புகளை தவிர்ப்பது நல்லது. 20.5.2026 அன்று இரவு 10.39 மணி முதல் 22.5.2026 அன்று நள்ளிரவு 2.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வழக்கு விவகாரங்கள் மற்றும் சொத்து தொடர்பான முயற்சியை ஒத்தி வைக்கவும்.மகாவிஷ்ணுவை வழிபடவும்.

மகரம்

சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். அஷ்டமாதிபதி சூரியன் புதனுடன் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆசைகளால் மனம் அலைபாயும். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் முதலீடுகளை ஒத்தி வைக்கவும். சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரும். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும்.

வெகு விரைவில் ராசிக்கு குரு பார்வை கிடைக்கப்போவதால் தலைக்கு வந்த பிரச்சனைகள் தலைப்பாகையோடு சென்று விடும். கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். சகோதர சகாயம் ஏற்படும். வாழ்க்கையில் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். அடமான நகை மற்றும் சொத்துக்களை மீட்டு மகிழ்வீர்கள். புதிய சொத்துக்கள், தங்க ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். வீர பத்திரரை வழிபடவும்.

கும்பம்

மேன்மையான வாரம். ராசி அதிபதி சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிந்தனையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் அகலும். உங்களின் முயற்சிகள் புதிய உத்வேகம் பெறும்.விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் பிரச்சனைகள் விலகி ஆதரவு உண்டாகும். அரசாங்க காரியங்களில் ஏற்பட்ட தடை தாமதங்கள் சீராகும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். சிலருக்கு திடீர் பண வரவுடன் ஜாக்பாட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தொழிலும், வாழ்க்கையிலும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டு உறவினர்களின் ஆதரவு உண்டு. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் ஆன்மீகச் சுற்றுலா அல்லது ஓய்விற்கு வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். கண் திருஷ்டி பாதிப்புகள் குறையும். சிவன் கோவிலுக்கு எண்ணை தானம் வழங்கவும்.

மீனம்

எதையும் சமாளிக்கும் ஆற்றலும் நம்பிக்கையும் பெருகும் வாரம். ராசி அதிபதி குரு ஜூன் 2 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறப்போகிறார். மன தைரியம் அதிகரிக்கும். எதையும் லகுவாக சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். செயல்களில் வெற்றி மிளிரும். தோற்றம் பொலிவு பெறும். ஆளுமைத்திறன், புகழ், பெருமை செயலாக்கம் அதிகரிக்கும். வேலையில் திறமை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகூடி வரும்.

இதுவரை தயங்கிக் கொண்டு இருந்த பல செயல்களில் அதிரடியாக இறங்கி செயலாற்றுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகும். ராசிக்கு குரு பார்வை வந்தவுடன் அரசியல்வாதிகளுக்கு ஒரு அதிர்ஷ்ட நிகழ்வு உண்டு. வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த மன சஞ்சலங்கள் அகலும். வரா கடன்கள் வசூல் ஆகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406