கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

2024 கார்த்திகை மாத ராசிபலன்

நிதானத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிப்பதால் விரயங்கள் கூடுதலாக இருக்கும். உடன் பிறப்புகளுக்காகவும், உடன் இருப்பவர்களுக்காகவும் விரயங்கள் செய்ய நேரிடும்.

ஜென்மத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் இருப்பதால் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டு. வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். வருங்காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும். பார்க்கும் குரு வக்ர இயக்கத்தில் இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நல்லது.

குரு வக்ரம்

ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றிருக்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது நன்மையே வழங்கும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.

விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். விவாகப் பேச்சுக்கள் கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைத்தவர்களுக்கு, வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

சனி - செவ்வாய் பார்வை

கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். முரண்பாடான கிரகங்களின் பார்வையால் நிறையப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நிலம் சம்பந்தமான வழக்குகள் வரலாம். நீண்ட நாட்களுக்கு முன்பு வந்த நோய் மீண்டும் தலைதூக்கி மனக்கவலை தரலாம். உத்தியோக மாற்றங்கள் திடீரென ஏற்பட்டு உள்ளத்தை வாடவைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாத பொறுப்புகள் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நேரம் இது.

மகர - சுக்ரன்

கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியானவர், சுக்ரன். தன - பாக்கியாதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது புதிய திருப்பங்கள் ஏற்படும்.

நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், அதிக விலைக்கு விற்று லாபம் தரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய் வக்ரம்

கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால் நல்ல வாய்ப்புகள் பல கைநழுவிச் செல்லலாம். நாடு மாற்றம், வீடு மாற்றம் போன்றவை எண்ணத்தில் இருக்குமே தவிர எளிதில் கிடைக்காது. உடல்நலத்தில் கவனம் தேவை. மூட்டு வலி, முழங்கால் வலி என்று, ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டேயிருக்கும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையலாம்.

கலைஞர்களுக்கு கடின முயற்சி தேவை. மாணவ-மாணவிகளுக்கு விருதுகளும், வெற்றிச் செய்திகளும் வந்துசேரும். பெண்கள் பரபரப்பாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவர். பிள்ளைகளின் லட்சியங்களை நிறைவேற்றுவீர்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 16, 17, 21, 22, 28, 29, டிசம்பர்: 3, 4, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.