ரிஷப ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார்.
அவரோடு புதன், சூரியன் ஆகிய கிரகங்களும் இணைந்துள்ள. எனவே 'புத சுக்ரயோக'மும். 'புத ஆதித்ய யோகமும் உருவாகிறது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உள்ளத்தில் நினைத்ததை உடனுக்குடன் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் நேரம் இது.
மிதுன - சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வரும்போது தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும்.
எதிர்பார்த்தபடி இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தலைமைப் பதவிகள் தானாக வருவதற்கான அறிகுறி தென்படும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபநிகழ்வுகள், இப்பொழுது நடைபெறும். உங்கள் வியாபாரத்தில் வி.ஐ.பி.க்கள் வாடிக்கையாளர்களாக மாறுவர்.
மிதுன -புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று, தனது சொந்த வீடான மிதுன ராசிக்குப் புதன் செல்கிறார். தனாதிபதியான புதன் தன ஸ்தானத்திற்கு வரும் போது தனவரவு தாராளமாகும்.
குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். வியாபாரம் வெற்றி நடைபோடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி வரலாம்.
உடல்நிலை சீராகும். உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் பல நல்ல செயல்களை செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
கடக சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கே குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரக சேர்க்கை. உங்களை பொறுத்தவரை நன்மையாகவே இருக்கும். திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் வந்துசேரும். வியாபாரம் வெற்றி நடைபோடும்.
கிளைத் தொழில் செய்யும் வாய்ப்பும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு, எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்த குழப்பம் அகலும். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும்.
இம்மாதம் சூரிய வழிபாடு சுகத்தை வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.