பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ம் இடத்தில் சொந்த வீட்டில் துலாம் ராசியில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். தனாதிபதி புதனும், அஷ்டம - லாபாதிபதியான குருவும் உச்சம் பெற்றிருக்கின்றனர். நவக்கிரகங்களில் மூன்று கிரகங்கள் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றன. மாதத் தொடக்கத்தில் சகாய ஸ்தானாதிபதி சந்திரன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே இந்த மாதம் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறப்போகிறது. பணிபுரியும் இடத்தில் உயர்வு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முக்கியப் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியான செவ்வாய், நீச்சம் பெறுவது நன்மை தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வழக்குகளும், வாய்தாக்களும் ஓயும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்க முற்படுவீர்கள். சப்தம விரயாதிபதியாக செவ்வாய் இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் வந்துசேரும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவக்காத்திருப்பர். செவ்வாய் தோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நல்லது நடக்கும்.
புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே தொழில் வெற்றி நடைபோடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர், புதன். எனவே தன வரவிற்கு பஞ்சம் ஏற்படாது. இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் அக்கறை கூடும். 'இல்லத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு. இப்பொழுது சுபநிகழ்வு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். தங்கம், வெள்ளி வாங்குவது மட்டுமல்லாமல், வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். முன்பு குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கும். பல நல்ல காரியங்களைச் செய்யும் நேரம் இது.
மீனத்தில் சஞ்சரிக்கும் சனி, மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம், சனி பகவான். மீனத்தில் வக்ரம் பெறும் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் நன்மைதான். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர், சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய ஒரு புதிய வாய்ப்பு வரும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்ற கவலை அகலும். இக்காலத்தில் 'கருநிறக் காகம் ஏறி..' என்று தொடங்கும் சனி கவசப் பாடலை சனி பகவான் சன்னிதியில் பாடி வழிபடுவது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாத கமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவி உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ -மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.