ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

ஆடம்பர, அந்தஸ்து நிறைந்த சொகுசு வாகனத்தில் குடும்பத்தாருடன் சென்று ஆனந்தம் அடைவீர்கள்.

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசியினரே... இதுவரை ராசிக்கு மூன்றாமிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக சுக ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.

அதிசார, வக்ர குருவின் பொது பலன்கள்

ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருபகவான் நான்காமிடத்திற்கு செல்வது சுப பலனாகும். மேலும்குரு பார்வை பதியும் 8,10,12ம் இடங்கள் மூலம் பல்வேறு சுப பலன்களும் நடைபெறும். நான்காமிடம் என்பது சுகஸ்தானம் என்பதால் லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். இதுவரை கட்டில், மெத்தை, சோபா, பிரிட்ஜ்,வாசிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருட்கள் இல்லாதவர்கள் அவைகளை வாங்குவார்கள். ஏற்கனவே வைத்திருப்பவர்கள் பழயதை கொடுத்து எக்சேன்ஜ் ஆபரில் புதியது மாற்றுவார்கள். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடம்பர, அந்தஸ்து நிறைந்த சொகுசு வாகனத்தில் குடும்பத்தாருடன் சென்று ஆனந்தம் அடைவீர்கள். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும்.

ஆதாயம்

குழந்தை பாக்கியத்தில் தடை, தாமதம் ஏற்படலாம்.செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்கள் சுய ஜாதகத்தை சரிபார்ப்பது அவசியம். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.விவசாயிகள் பன்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம். கால்நடை மற்றும் உயிரினம் வளர்ப்பவர்களுக்கு ஆதாயம் மிகும்.விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம்.சிலர் பயன்படாத காலி நிலங்களை கார் ஷெட், இரண்டு சக்ர வாகனம் நிறுத்துமிடமாக மாற்றி வாடகை பெறலாம்.பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும்.சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம். வெகு சிலருக்கு அடமானத்திவிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். ஓட்டை வண்டியை வைத்து காலத்தை ஓட்டியவர்கள் புது வண்டி வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் சொத்தை சகோதரர் தனக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு மேலோங்கும்.

பொருளாதாரம்

உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கிகள், பைனான்ஸ் கம்பெனிகள் உங்களுக்கு கடன் கொடுக்க வீடு தேடி வருவார்கள். தேவையில்லாத கடன் சிரமம் தரும் என்பதால் இயன்றவரை கடன் வாங்குவதைத் தவித்தல் நலம். வம்பு, வழக்கு பிறர் விவகாரஙகளில் தலையீட்டை குறைத்தல் நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவது,கடன் கொடுப்பது, வெற்று காசோலை தருவது போன்றவற்றில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டப் பணம், சீதனம் கிடைக்கும். சுய ஜாதகத்தில் வலுவான தசா புக்தி இருந்தால் ஏற்றுமதி,இறக்குமதி மூலம் பெரும் லாபம் கிடைக்கும். வட்டி தொழில் , சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, தாமதம் ஏற்படும்.முறையற்ற ஆவணங்களால் வம்பு , வழக்கு , பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்கள்

குரு பகவான் வக்ரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணப்புழக்கம் குறையலாம். மாதத்தவணையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நெடுந்தூர வெளிநாட்டு பயணம், ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். பொருள் இழப்பு,திருட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கர்ம வினை நோய்க்கு வைத்தியம் செய்பவர்கள் இயற்கை வைத்தியத்தை நாடினால் நோய் தாக்கம் விரைவில் கட்டுப்படும்.

மாணவர்கள்

10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். வழக்கத்தை விட அதிக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பதால் பொதுத் தேர்வு எழுதும் போது விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடவும்.உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு.

முதலீட்டாளர்கள்

ஏற்கனவே சுமாராக இருந்த தொழில் கூட சூப்பர் தொழிலாகும். இழுத்து மூடி விட்டுப் போகும் தொழில் கூட முன்னேற்றமடையும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம்.நீண்ட காலமாக தடைபட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள்.தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். கடன் தொல்லைகளிலிருந்து தீர்வு கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் ஆரம்பிக்க ஏற்ற காலம் அல்ல. நல்ல பங்குதாரை இழப்பது அல்லது தவறான பங்குதாரரை சேர்ப்பது போன்ற தவறுகள் நேரலாம் என்பதால் பங்குதாரர்களிடம் கருத்து வேறுபாட்டை தவிர்க்க வேண்டும். அரசு வழி ஆதாயம் உண்டு. நிதி, நிர்வாகம், நீதித்துறை, வழக்குரைஞர்கள், நீதிபதிகள்,ஆடிட்டர்கள் அதிக அளவிலான நன்மை அடைவார்கள்.இவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் சிற்சில மாற்றங்கள் ஏற்படும்.எந்த செயலிலும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்பட்ட நிலை மாறும்.மன சஞ்சலம்,மனக்குழப்பம் தடை, தாமதங்கள் அகலும். பத்தாமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றத்துடன் கூடிய பதவி, ஊதிய உயர்வு கிடைக்கும்.தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்

ஒருவரின் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் விரும்பிய பதவி தேடி வரும். சனி பகவான் பதவி கொடுத்தால் யார் தடுக்க முடியும். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதை கடந்த காலத்தில் உணர்ந்து இருப்பீர்கள். கிடைத்த பதவியை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சிறிய வைத்தியத்தில் சீராகும்.மீள முடியாத வழக்கால் பட்ட பாதிப்பு குறையும். வழக்கிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். எப்போதோ நடந்த விபத்திற்கான நஷ்ட ஈடு இப்போது கிடைக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் நவக்கிரக வழிபாடு செய்தல் நலம். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் சக்தி சித்தர் வழிபாட்டிற்கு உண்டு. ஜென்ம நட்சத்திர நாளில் சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் நல்ல மாற்றமும், ஏற்றமும் கிடைக்கும்.மனக் குறைகள் நீங்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT