ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

ரிஷபம்- ஜென்ம குரு

வசீகரமான ரிஷப ராசியினரே!

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் இடத்தில் நின்ற குரு பகவான் மே 1, 2024 முதல் ராசிக்குள் நுழைகிறார். இந்த காலகட்டத்தில் தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் தனது 3ம் பார்வையால் விரய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். ராசிக்கு 5ல் கேதுவும் 11ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஜென்ம குருவின் பொதுபலன்கள்

ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியான குருபகவான் ஜென்ம ராசிக்குள் நுழைவது ரிஷபராசிக்கு சுபமா? அசுபமா என்ற சிறு அச்சம் இருக்கத்தானே செய்யும். ஜென்மத்தில் குரு வந்த காலத்தில் ராமரே வனவாசம் சென்றார். நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற கேள்வி நிச்சயம் எழும். இங்கே அனைவரும் கவனிக்க வேண்டிய விசயம் என்ன வென்றால் ராமர் 14 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்பது அவருக்கு இடப்பட்ட கட்டளை.

ஜென்மத்தில் நின்ற குரு குடும்ப ஸ்தானத்திற்கு சென்றவுடன் ஏன் ராமர் நாடு வந்து சேர வில்லை? அதனால் ரிஷப ராசியினர் வருத்தப்படத் தேவையில்லை. அஷ்டமாதிபதி ராசிக்குள் நுழைவது விபரீத ராஜயோகம். உண்மையை கூற வேண்டும் என்றால் விரயத்தில் குரு நின்ற காலத்தில் வீட்டை விட்டு சென்றவர்கள், சிறை தண்டனை அனுபவித்தவர்கள். தொழில், உத்தியோகத்திற்காக குறுகிய காலம் வெளியூர். வெளிநாடு சென்றவர்கள், வைத்தியத்திற்காக அதிக காலம் மருத்துவமனையில் தங்கியவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் வந்து சேரும் காலம் வந்து விட்டது.

ராசியில் நிற்கும் குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது. இதுவரை சந்தித்த இழப்புகள், கற்ற வாழ்க்கைபாடம், அனுபவித்த துன்பத்திலிருந்து மீளும் நேரம் வந்துவிட்டது. இழந்ததை நினைத்து வருத்தப்படாமல் நடக்க வேண்டியதை பார்ப்பது தானே புத்திசாலித்தனம். நேரம், காலம் நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும் இந்த குருப் பெயர்ச்சியில் தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். விட்டதை பிடிக்கும், இழந்ததை மீட்கும் அற்புதமான நல்ல காலம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

குருவின் 5ம் பார்வை பலன்கள்

ஜென்ம ராசியில் நிற்கும் குருவின் 5ம் பார்வை 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. ஒரு மனிதனுக்கு 5ம்மிடம் வேலை செய்யும் போது வாழ்வில் செட்டிலாக தேவையான அனைத்து அமைப்புகளும் கூடிவரும். 5ம்மிடம் குலதெய்வம், பூர்வீகம் மற்றும் குழந்தைகளைப் பற்றிக் கூறுமிடம் என்பதால் பல வருடங்களாக பூர்வீகத்தை மிதிக்காதவர்கள் கூட சொந்த மண்ணில் கால் பதிப்பார்கள்.

பூர்வீகச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் மறைந்து உரிய பங்குத் தொகை கிடைக்கும்.தான் பிறந்த மண்ணில் கைப்பிடி மண்ணாவது சொந்தமாக வாங்க முடியுமா என்று வருந்தியவர்கள் நிலம், தோட்டம் என வாங்கி ஆனந்தம் அடைவார்கள். புத்திரகாரக கிரகம் குரு புத்திர பாவகத்தை பார்ப்பதால் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குரு கடாட்சத்தால் ஆண் மகவு பிறக்கும்.

5ம்மிடம் என்பது ஒருவரின் விருப்பம், லட்சியம், ஆசையை தெரிவிக்கும் இடம் என்பதால் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். இது பதவி ஸ்தானம் என்பதால் கவுரவப் பதவி, அரசியல் பதவி மற்றும் அவரவர் வயதிற்கும் ஏற்ற ஒரு உயர்வு நிச்சயம் உண்டு. கலைத்துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் நடிப்புத் திறமையால் சாதனையாளர்கள் பட்டியவில் இடம் பிடிப்பீர்கள்.

குருவின் 7ம் பார்வை பலன்கள்

ஜென்ம குருவின் சம சப்தம பார்வை நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், களத்திரம், சமுதாய நட்பு பற்றிக் கூறும் 7ம் இடத்தில் பதிகிறது. அங்கே குருவின் பார்வையுடன் 9,10ம் அதிபதியான சனியின் பார்வையும் பதிவதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் ஒரு உன்னத நிலை உண்டாகும். இது வரை தனித்து சுய தொழில் நடத்தியவர்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, உற்றார், உறவுகளுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். ஏற்கனவே கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் புதிய பங்கு தாரர்களை இணைக்கலாம். தொழிலுக்கு அரசு ஆதரவு கிடைக்கும்.

வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். தொழில், வேலைக்காக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். கூட்டுக் குடும்பமாக வசிக்கும் உறவுகளுக்குள் அன்பும் அனுசரனையும் அதிகமாகும். விட்டுக் கொடுத்துச் செல்வார்கள்.சுப நிகழ்வுகளால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

குருவின் 9ம் பார்வை பலன்கள்

குருவின் 9ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது.தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் கூடி வரும். பிறந்த குலத்தின் மேல் அபிமானம் கூடும்.எதற்கும் கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுவீர்கள். குலப் பெருமையை காப்பாற்ற பாடுபடுவீர்கள். உயர் கல்வி முயற்சி உடனே பலிதமாகும். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.பிள்ளைகளுக்கு திருமணம் நடப்பது, பேரன் பேத்தி பிறப்பது போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். பெற்றோர்களின் அன்பிற்கு மனம் ஏங்கும். பெற்றவர்களின் அருமை புரியும்.

பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகளைப் பெற முயற்சிப்பீர்கள். பித்ருக்கள் வழிபாடு மற்றும் தில ஹோமத்தின் மூலம் பாக்கிய பலனை அதிகரிக்க உகந்த காலம். காசி, ராமேஸ்வரம், கைலாஷ், மான சரோவர் போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று ஆன்மாவை புனிதப் படுத்துவீர்கள். குல இஷ்ட தெய்வ வழிபாடுகள், வேண்டுதல்களை நிறைவேற்றலாம். ஆன்மீக வாதிகள், குருமார்கள், ஞானிகள், சித்தர்கள் மற்றும் தவசிகளின் நல்லாசிகள் கிடைக்கும். கோவில் கட்டுதல், கும்பாபிசேஷகம் நடத்துதல் போன்ற புண்ணிய காரியங்கள் செய்யலாம்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

ரிஷப ராசிக்கு 4ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். தாயின் அன்பும் அணுசரனையும் உங்களை மகிழ்விக்கும். ஆரோக்கிய கேடுகள் விலகும். நோய் தாக்கம் குறைந்து தேக சுகம் மேம்படும்.

புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். கல்விக்கு மீறிய அனுபவ திறமை ஏற்படும். அரசு வேலை முயற்சி வெற்றி தரும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் .கடந்த காலத்தில் வாங்கிய கடன் சுமைகள் குறையும். தாய் மாமன், மைத்துனர் மூலம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

ரிஷப ராசிக்கு 3ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பட்டா இல்லாத நிலபுலன், வீட்டு மனை வைத்து இருப்பவர்கள் முறையான ஆவணங்கள் கிடைக்கும். வீடு, மனை, வாகனங்கள் விற்றல், வாங்குதல் மிக சுலபமாக நடைபெறும். பூர்வீக சொத்து தொடர்பான சட்ட சிக்கல் ஏதேனும் இருப்பின் தீர்ந்து விடும் தாயார், பூர்வீகம் தொடர்பான விஷயங்களில் சகோதரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். சகோதரர்களுக்குகாக அதிக செலவு செய்ய நேரும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

ரிஷப ராசிக்கு 7, 12ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல நற்பலன்கள் நடக்க உள்ளது. உங்கள் அன்றாட பணிகள் சுலபமாக நடைபெறும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். அரசியல் தலைவர்கள் , மதச் சீர்திருத்த வாதிகள் பொது ஜனங்களை மிகவும் கவர்ந்து தங்கள் வசப்பபடுத்துவார்கள். சொகுசான வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். சினிமா , கேளிக்கை விசயங்களில் அதிக நாட்டம் உண்டாகும்.

குருவின் வக்ர காலம் (செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வாழ்க்கைத் துணை, களத்திரம், நண்பர்கள் மூலம்வீண் செலவுகள் விரயங்கள் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அலைச்சல் அதிகமாகும். மனதிற்கு பிடிக்காத அசவுகரியமான இடப்பெயர்ச்சி ஏற்படும்.சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வீர்கள். தொழில் கூட்டாளிகள் பிரிந்து செல்வார்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

பெண்கள்

தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். குடும்ப உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாளவும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. 5ல் கேது, 11ல் ராகு இருப்பதால் பல சாதகங்கள் நடந்தாலும் இனம் புரியாத மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். சிலருக்கு கை, கால் வலி அதிகமாக இருக்கும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சனை சுமூகமாகும்.

மாணவர்கள்

ராசிக்கு 5ம் இடத்தில் கேது நிற்கிறார். குருவும் 5ம் இடத்தை பார்ப்பதால் ஆழ்மன சிந்தனைகள் பெருகும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். படித்த பாடம் மனதில் அப்படியே பதியும். 2025ம் ஆண்டு பொதுத் தேர்வு உங்கள் வாழ்க்கைப் பாதையை நல்ல முறையில் மாற்றி அமைக்கப் போகிறது.

 பரிகாரம்

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவானால் சுப பலன்கள் மேம்பட புதன் கிழமை மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.