எதார்த்தத்தை விரும்பும் விருச்சிக ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் பாக்கிய ஸ்தானத்திற்குள் கேது பகவானும் முயற்சி ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மை உண்டாகும். தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற நினைப்பு அதிகமாகும். அனைத்து விசயத்திலும் பொறுப்புடன் சிறப்பாகவும் ஈடுபடுவீர்கள். திடகாத்திரமாக கட்டு மஸ்தான உடல் வாகு ஏற்படும்.இவர்களுக்கு கோபம், ரோசம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் அதிகமாகும். விரும்பிய முன்னேற்றம் மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால் உன்னதமான நிலையை அடைவார்கள். ஜீவ காருண்யம் தயாள குணம் அதிகமாகும்.சுக போகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகும். ஆற்று மணலை கூட அளந்து விடலாம் விருச்சிக ராசியினரின் மனதை அளக்க முடியாது அவ்வளவு ரகசியங்களை தம்முள் வைத்திருப்பார்கள். இவர்கள் மனதில் உள்ள எண்ணங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இவர்களுக்கு திட்டங்களும் ரகசியங்களும் மறைபொருளாகவே இருக்கும். எந்த செயலையும் முழுமையாக செய்து முடித்த பிறகு பிறரிடம் அதைப் பற்றி தெரிவிப்பார்கள். எப்படியெல்லாம் கோபப்படுவது என்பதையும் இவர்களிடம் இருந்துதான் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.
விருச்சிக ராசியின் அதிபதி மற்றும் ஆறாம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் இது நாள் வரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் காலம். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டும் தேடி வரும்.புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும். வேலைப் பளு குறையும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அன்பைக் கூட கோபமாகத் தான் வெளிப்படுத்துவார்கள்.
விருச்சிக ராசிக்கு பாக்கிய ஸ்தான அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் உத்தியோகம், தொழில், கல்வி போன்ற காரணத்திற்காக இடம் பெயர நேரும். சிலருக்கு வாழ்க்கை துணை மூலம் வருமானம் கிடைக்கும். வெகு சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டத்தில் தந்தையின் வாரிசு வேலை படித்துக் கொண்டு இருக்கும் போதே கிடைக்கும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை , திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி தவித்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகளை ஒன்பதாமிட கேது இழுத்தடிப்பார்.சிலருக்கு கண் பார்வை குறைபாடு அல்லது பல் தொந்தரவு இருக்கும். செய்தி, தகவல் தொடர்பு, அச்சுத் துறை, நூலகத்துறையில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.
விருச்சிக ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் வேலைகளை தெளிவான மனநிலையோடு விரைவாக செய்து முடிக்க ராகு பகவான் உங்களுக்கு ஆசி வழங்குவார்.சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும்.பல புதிய தொழில், தொழில் கிளைகள், தொழில் விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு கிடைக்கும். லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும்.
பாக்கிய ஸ்தான கேது பகவான் நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றை போதிப்பவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர்.இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து நல்ல பலன்களும் தேடிவரும்.தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்படும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைப்பதில் தடை தாமதம் எற்படும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் வழங்க தயராக இருக்கிறார். அதை பயன்படுத்த விருச்சிக ராசியினர் தயராக வேண்டும்.உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு மிகும்.
விருச்சிக ராசிக்கு 8, 11ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விரும்பிய அனைத்தும் தேடி வரும். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சிறிய வைத்தியத்தில் சீராகும்.மீள முடியாத வழக்கால் பட்ட பாதிப்பு குறையும். வழக்கிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். எப்போதோ நடந்த விபத்திற்கான நஷ்ட ஈடு இப்போது கிடைக்கும்.
விருச்சிக ராசிக்கு 3,4ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகள் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் வந்து குவியும்.உங்களின் பூர்வீக மற்றும் சுய சம்பாத்திய சொத்துகளின் ஆவணங்கள் தொடர்பான குழப்பம் உங்களை கவலையில் ஆழ்த்தும். முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும்.அரசியல்வாதிகளுக்கு ஆனந்தமான நேரம். வெளி உலகத்திற்கும், கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும். உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள், ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும்.
விருச்சிக ராசிக்கு 2 ,5ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள்.தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும். பங்குச் சந்தை , ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பித்ரு தோஷம் உருவாக ஆரம்பிக்கும் அல்லது பித்ரு தோஷம் அதிகமாகும்.எனவே இந்த ஒன்றரை ஆண்டுகளில் நீங்கள் கலந்து கொள்ளும் சுப.அசுப நிகழ்வுகளில் நல்லதை பற்றி மட்டும் பேசவும். மிக குறிப்பாக பூர்வீக சொத்து மற்றும் இறந்தவர்களை பற்றி விமர்சிப்பதை தவிர்க்கவும்.
பிரதோஷ காலத்தில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வணங்க வேண்டும். முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணங்களை செய்து பாக்கிய பலன்கள் அதிகமாகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.