விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 புரட்டாசி மாத ராசிபலன்

இறை நம்பிக்கையால் எதையும் சாதிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார நிலை உயரும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் வருமானம் உயரும். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். வருங்காலத்தை வளமாக்கிக்கொள்ள எடுத்த புது முயற்சிகள் வெற்றி பெறும். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அா்த்தாஷ்டமச் சனி வக்ரம்பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சிகள் கைகூடும். மனை கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிடம் பழுது பார்ப்பது, சொத்துக்கள் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள்.

'தொழிலுக்கான மூலதனம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாழ்வில் திருப்புமுனை உண்டாகும் நேரம் இது. பிள்ளைகளின் மேல் படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளிநாடு செல்வதற்கு முயற்சி எடுத்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

புதன் உச்சம்

புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம, லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி உச்சம் பெறுவது நன்மைதான். லாபம் குவியும். தொழில் வெற்றி நடைபோடும். செல்வாக்கு உயரும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து முக்கியப் புள்ளியாக மாற வாய்ப்பு உருவாகும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர்.

எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். தொழிலை விரிவு செய்து, நிரந்தர வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

துலாம் - சுக்ரன்

புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 7, 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரனால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். இருந்தாலும் வாழ்க்கைத் தேவைகள் முழுவதும் பூர்த்தியாகும்.

வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வரன்கள் வாசல் தேடி வந்துசேரும். தொழில் செய்வோர், கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.

துலாம் - புதன்

புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். செல்வாக்குமிக்க ஒருவரால் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்குவர். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய அளவிற்கு லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தைப் பெறுவர். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடிவரும். வருமானம் திருப்தி தரும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

செப்டம்பர்: 17, 18, 27, 29, அக்டோபர்: 2, 3, 4, 9, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.