விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஆவணி மாத ராசிபலன்

தன்னம்பிக்கை தளராமல் பார்த்துக்கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'குருமங்கள யோகம்' உருவாகிறது. எனவே மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். நாலாபுறம் இருந்தும் நல்ல தகவல் வந்து கொண்டே இருக்கும். வருமானம் திருப்தி தரும். வருங் காலத்தை பற்றிய பயம் அகலும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். மொத்தத்தில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை வழங்கும் நேரம் இது.

சனி - சூரியன் பார்வை

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன், அவரை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் பெற்றிருப்பது யோகம் தான். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உயர்கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கை கூடும். தொழில் வெற்றி நடைபோடும்.

தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பகைக் கிரகமான சனியின் பார்வை அவர் மீது பதிந்தாலும், வக்ர சனியாக இருப்பதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. நடக்கும் காரியங்கள் நல்லவிதமாக நடைபெற நம்பிக்கையோடு சனி பகவான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

சுக்ரன் நீச்சம்

ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கூடுதலாக இருந்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆடை - ஆபரணச் சேர்க்கை உண்டு.

வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் வாழ்க்கை துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.

மிதுன - செவ்வாய்

ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். தொழிலில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும். செவ்வாயின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார நிலை திருப்தியாகவே இருக்கும்.

கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். தேங்கிய காரியங்கள் சுறு சுறுப்பாக நடைபெறும். தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். புகழ்மிக்க புராதன கோவில்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கைகூடும். செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தேகநலன் சீராகும். செல்வ நிலை உயரும்.

சிம்ம - புதன்

ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதியான புதன் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

'புத ஆதித்ய யோகம்' செயல்படும் இந்த நேரத்தில், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். சந்தர்ப்பங்கள் எல்லாம் சாதகமாக அமையும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமான உயர்வுக்கு வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 17, 18, 20, 21, 31, செப்டம்பர்: 1, 5, 6, 12, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.