விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஐப்பசி மாத ராசிபலன்

புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. எனவே பொருளாதார நிலை உயரும்.

பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் நேரடிப் பார்வை, உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இனிய சம்பவங்கள் பல இல்லத்தில் நடைபெறும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

செவ்வாய் நீச்சம்

ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். 'நம் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெறுகிறாரே' என்று நினைக்க வேண்டாம். செவ்வாய் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதால், அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிரிகளின் பலம் குறையும்.

எதிர்பார்த்ததைக் காட்டிலும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். பழகும் நண்பர்கள் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய முன்வருவர். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

விருச்சிகம் - புதன்

ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன், உங்கள் ராசியில் சஞ்சரிப்பது யோகமான நேரம்தான். தொழில் வெற்றி நடை போடும். தொகை வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும்.

மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் பதவி உயா்வும், சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு.

சனி வக்ர நிவர்த்தி

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக விளங்குபவர் சனி பகவான். சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், பலம்பெறும் இந்த நேரத்தில் நிலபுலன்களால் ஆதாயம் வந்தடையும்.

நினைத்தது நிறைவேறும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

தனுசு - சுக்ரன்

ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு. வீடு, இடம் வாங்கும் யோகம் செயல்படும்.

படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 25, 26, 29, 30, நவம்பர்: 6, 7, 8, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.