பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. இருப்பினும் அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். நல்லகாரியம் இல்லத்தில் நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்தைப் பெறுவர். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். குரு கவசம் பாடி குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
புரட்டாசி மாதம் 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பழைய சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பதவி உயர்வு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் அல்லது வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டு வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். ஆரோக்கி யத் தொல்லை அகலும். உங்களுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ திருமணத் தடை இருந்தால் அது விலகும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். வெளிநாட்டில் பணிபுரிய வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு, அந்த முயற்சி கைகூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்ற நண்பர்கள் உறுதுணைபுரிவர். அசையாச் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, யாருக்கு செவ்வாய் பலம் நன்றாக இருக்கின்றதோ அவர்களின் பெயரில் சொத்து வாங்குவது நல்லது.
மீன ராசியில் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவர் மீது உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிகிறது. எனவே அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வாகனங்களால் தொல்லை வரலாம். வாகன மாற்றம் செய்துகொள்வது நல்லது. தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். இடம், பூமி விற்பனை எளிதில் முடிவடைவதுடன். லாபமும் கிடைக்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஆதாயம் கிடைக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு குறையும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்- ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு அசையாச் சொத்துக்கள் சேரும். வருமானம் போது மானதாக இருக்கும்.