தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஐப்பசி மாத ராசிபலன்

உதவும் குணத்தால் உயர்நிலையை அடையும் தனுசு ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், வக்ரம் பெறுவது நன்மைதான்.

எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். தொழில் வளம் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் நீச்சம்

ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி யான அவர் நீச்சம் பெறுவது நன்மைதான்.

விரயங்கள் குறையும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் வரலாம். பூமி விற்பனையால் லாபம் உண்டு.

விருச்சிகம் - புதன்

ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், விரய ஸ்தானத்திற்கு வரும்போது சுப விரயங்கள் அதிகரிக்கும். தொழில் மாற்றமும் உண்டு. உத்தியோகத்தை பொறுத்தவரை எதிர்பாராத விதத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கலாம்.

எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. பழைய வாகனத்தை கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதியவர்கள் வந்து இணையும் வாய்ப்பு உண்டு.

சனி வக்ர நிவர்த்தி

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இப்பொழுது பலம் பெறும் சனியால் சகாய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை தேடிவரும். நெருக்கடி நிலை அகலும்.

உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். கடன் சுமை குறையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு திருப்தி தரும்.

தனுசு - சுக்ரன்

ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும்போது, மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் பலவும் நடைபெறும். ஒரு சிலருக்கு நாடு மாற்றமும், வீடு மாற்றமும் உண்டு. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

வெளிநாட்டில் இருந்து அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக பணியாளர்களின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு மகத்தான எதிர்காலம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக தீரும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 27, 28, 31, நவம்பர்: 9, 10, 12,13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.