பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசியிலேயே சனி வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். ஜென்மச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் தரும் தகவல்கள் வந்துசேரும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். விரயத்திற்கேற்ற வருமானம் உண்டு. வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு உண்டு.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்தில் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். உங்களை விட்டு விலகிஇருந்த உறவினர்கள் இப்பொழுது வந்திணைவர். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு சில முக்கியக் காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்த பகை மாறும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மாறி ஒற்றுமை பலப்படும்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதியான அவர், அஷ்டம ஸ்தானத்திற்கு வரும்போது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதுவரை வராமல் இருந்த பாக்கிகள் இப்பொழுது வசூலாகும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். 'வியாபாரம் நடக்கும் இடத்தை மாற்றலாமா? அல்லது வியாபாரத்தையே மாற்றலாமா?" என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அடமானம் வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். மாணவ -மாணவியருக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு எதிர் பார்ப்புகள் நிறைவேறும்.