மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

ஆடி மாத ராசிபலன்

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீன ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, 3-ம் இடத்தில் தனாதிபதி செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருள்தரும் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஜென்மத்தில் ராகு இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதியவர்கள் வந்து இணைவர். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

குரு - செவ்வாய் சேர்க்கை

மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றனர். வெற்றிகள் ஸ்தானத்தில் ராசிநாதன் குருவோடு தன - பாக்கியாதி பதியான செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால் 'குரு மங்கள யோகம்' ஏற்படுகிறது. பூமி சேர்க்கையும், பொருள் சேர்க்கையும் ஏற்பட புதிய வழியைக் கையாளுவீர்கள். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். உடன் பிறப்பு களுக்கோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ நடைபெறும் சுப காரியங்களை முன்நின்று நடத்தி வைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம்.

புதன்-வக்ரம்

கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் வலிமை இழக்கும் பொழுது யோகம் செய்யும். எனவே இக்காலத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். பெற்றோரின் மணி விழா, பவள விழா போன்றவை நடைபெற எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவீர்கள். படித்து முடித்த வாழ்க்கை துணைக்கு இப் பொழுது வேலை கிடைக்கும்.

சிம்ம - சுக்ரன்

ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வரும் போது, 'கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, திடீர் மாற்றங்கள் நல்லவிதமாக அமையும். வருமானம் உயரும். கடன் பாக்கிகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தலைமை பொறுப்புகள் தானாக கிடைக்கும். தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். தன்னிச்சையாக இயங்குவதில் ஆர்வம் ஏற்படும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 17, 18, 22, 23, 28, 29, ஆகஸ்டு: 13, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.