எந்த நேரமும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மீன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் விரய சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். எந்த புது முயற்சி செய்தாலும் அதில் தடை, தாமதம் உருவாகும்.
காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். என்றாலும் அதுவரை மன நிம்மதி குறைவாகவே இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க போராட்டம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களையும், அருகில் உள்ளவர்களையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்குச் சென்ற பிறகும் செவ்வாயின் பார்வை அவர் மீது பதிகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சுக்ரன். இதன் பார்வை பலனால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
கடன் சுமை குறைய புதிய முடிவெடுப்பீர்கள். நெருக்கடி நிலை அகலும். நீண்டதூர பயணங்கள் பலன் தருவதாக அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு அதிபதியானவர் குரு. அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசியின் தொழில் ஸ்தானத்திற்கும் அவரே அதிபதி. அப்படிப்பட்ட குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடுத்தவருடைய விஷயத்தில் தலையிடுவதன் மூலம் வீண் விவாதங்கள் ஏற்பட்டு, மன வருத்தம் அடைவீர்கள். தொழிலில் உள்ள பங்குதாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர்.
உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். பரிகார தலங்களுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதி 12-ல் மறையும் இந்த நேரம் நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமை பொறுப்புகள் தேடி வரலாம். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடிவடையும்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள். மாமன் - மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் உண்டு. தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். உங்கள் கை ஓங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். மாணவ - மாணவிகளுக்கு, படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 27, 28, 29, ஜனவரி: 2, 3, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.