மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஆவணி மாத ராசிபலன்

வாழ்க்கையை வளமாக்க வளைந்து கொடுத்து செல்லும் மீன ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தைரியகாரகன் செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கை பாதையை சீராக்கிக் கொள்வீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு இருக்கிறார். 'ராகுவை போல கொடுப்பானுமில்லை' என்பது பழமொழி. எனவே பொருளா தாரம் மிக திருப்தியாக இருக்கும். கேது 7-ல் இருப்பதால் வாழ்க்கை துணை வழியே சில பிரச்சினைகள் மீண்டும் வந்து தலைதூக்கும்.

சனி - சூரியன் பார்வை

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. என்றாலும், உங்கள் ராசியை பொறுத்தவரை யோகம்தான். ஏன் என்றால் 6-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன் 12-ம் இடத்திற்கு அதிபதியான சனியை பார்ப்பதால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல காரியங்களும், எதிர் பாராத திருப்பங்களும் நடைபெறும்.

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். மணி விழா, மணவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் சூழல் உருவாகும். அருகில் இருப்பவர்களின் ஆதரவோடு நல்ல காரியமொன்றை நடத்தி வைப்பீர்கள்.

சுக்ரன் நீச்சம்

ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியானவர் குரு. அவருக்கு பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன் நீச்சம் பெறும் இந்த நேரத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.

மிதுன - செவ்வாய்

ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்போது, தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்குரிய செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கும்.

உற்றார் - உறவினர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களும் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் கைநழுவி சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடிவரும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரித்து பொருளாதார நிலையை உயர்த்தும். புனிதப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்ம - புதன்

ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் வாசல் தேடி வரலாம். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

தொழில் நடத்துபவர்களுக்கு கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும், திடீர் தனவரவும் உண்டு. பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் யோகம் உண்டு. மாணவ - மாணவிகள் கல்வி யில் தேர்ச்சி பெறுவர். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 19, 20, 25, 29, 30, செப்டம்பர்: 10, 11, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.