துலாம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

திருமணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கு இல்வாழ்க்கை இன்பம் கிடைக்கும்.

கலை ஆர்வம் நிறைந்த துலாம் ராசியினரே துலாம் ராசிக்கு 4, 5ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் வக்ர கதியில் 27.7.2026 முதல் 10.12.2026 வரை சஞ்சரிக்கப் போகிறார். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். வாழ்க்கையை செம்மையாக நடத்த தேவையான ஜீவனங்கள் வரத் துவங்கும் . கல்வித்தடை, உற்றார் உறவினர் பகை, டென்ஷன், ஆரோக்கியக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அரசு வேலை முயற்சி கைகூடும். கடன்களை அடைக்கும் மார்க்கம் தென்படும். இடமாற்றத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் மாறும்.வழக்குகளில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள், முதியோர் இல்லம் சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு கட்டும் பணி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழ்வார்கள்.

வார்த்தையில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு ஆறாது. நீங்கள் விட்ட வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. உங்கள் முன் நல்லவர் போல் ஆமாம் போட்டு உங்களுக்கு பின்னால் நீங்கள் பேசியதை திரித்து பேசி குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடுவார்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள் பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினால் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும். பெற்றோரே உலகம் என்று நம்பி வாழ்ந்த உங்களுக்கு பெற்றோரே உரிய நேரத்தில் பாசம் காட்டாமல் இருப்பார்கள்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை)

துலாம் ராசிக்கு 9,12ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்கிரகதியில் சஞ்சரிக்கும் காலம் தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தந்தையின் நல்லாசிகள் கிட்டும்.. ஆன்மீக குருமார்களின் சந்திப்பும் ஆசியும் ஆன்மாவை குளிரச் செய்யும். தடைபட்ட தொழிலில் மாற்றமும் கிடைக்கும். குலத் தொழிலை செய்வதில் ஆர்வம் ஏற்படும். வயதானவர்கள் ஆயுள் பயத்தில் தனது விலை உயர்ந்த தங்கம், வெள்ளி வைர நகைகள், சொத்துக்கள் தொடர்பான பத்திரங்களை அல்லதுஉயில் எழுதி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பார்கள. ஆன்மீகச் சுற்றுலா செல்வது போல், கோவிலுக்கு செல்வது போல், இவர்களே கோவிலில் பூஜை செய்வது போல், மலை ஏறுவது போல் கனவு வரும். தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து மகிழ்வார்கள். திருமணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கு இல்வாழ்க்கை இன்பம் கிடைக்கும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை)

துலாம் ராசிக்கு 5, 6ம் அதிபதியான குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் வக்கிரகதியில் உலாவும் காலம் தான, தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக இயக்கங்களில் இணைந்து பொதுக்காரியங்களில் ஈடுபடுவார்கள். தற்போது முன்னோர்களுக்கு முறையான வழிபாடு செய்ய வேண்டிய காலம். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தவர்கள் வீடு திரும்புவார்கள். ஒரு சிலர் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாவார்கள். சொத்து வாங்கும்போது விற்கும் போது தவறான விலை நிர்ணயம் உண்டாகலாம். எனவே காலம் கனியும் வரை காத்து இருப்பதே புத்திசாலித்தனம்.ஒரு சிலருக்கும் வீட்டை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் பட்ஜெட் கையை பிடிக்கும்.வாகனங்களில் பழுது நீக்கியே சலிப்பு மிகுதியாகும். எனினும் ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் பயப்பட வேண்டாம்.

திருமணம்

திருமணம் நடத்த ஏற்ற காலம். இரண்டாமிடத்திற்கு குரு பார்வை தடைபட்ட திருமணம் குருவின் நல்லாசியுடனும், வீட்டுப் பெரியோர்களின் முன்னிலையில் சீரோடும், சிறப்போடும் நடக்கும்.

பெண்கள்

பெண்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக இருக்கும் குடும்பத்திலுள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும் . உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும் உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும்.வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முதலீட்டாளர்கள்

குருப் பெயர்ச்சி மகிழ்ச்சியை தரும். தொழிலை விரிவு படுத்த போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலை விரிவு படுத்த தேவையான கடனுதவி கிட்டும். அஷ்டம ஸ்தானத்தில் குரு உச்ச பலத்துடன் இருப்பதால் தேவைக்கு அதிகமாக கடன் வாங்க கூடாது. வராக்கடன்கள் வசூலாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு முதலீடு அந்நிய மதத்தவர் அல்லது வேற்று மொழி பேசுபவர்களின் ஆதரவு கிடைக்கும்.தொழில் தந்திரம் மற்றும் சூட்சமத்தை கற்றுக் கொள்வீர்கள். ஆட்டம் கண்ட தொழில் ஸ்ட்ராங்காகும். இதுவரை அப்பாவின் தொழில் ஸ்தாபனத்தை கனவில் கூட காணாத மகன்கள் கூட அப்பாவுடன் தொழிலுக்கு செல்வார்கள். சோம்பேறியாக வீட்டில் முடங்கி கிடந்த ஆண்கள் வேலைக்கு செல்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள்

வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டும் தேடி வரும்.புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும். விரும்பத்தகாத இட மாற்றம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் இல்லாத பழியை உங்கள் மேல் சுமத்த வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு மிகுதியாக இருக்கும். தனியார் துறையில் வேலை பார்க்கும் பலருக்கு சுய தொழில் ஆர்வம் அதிகரிக்கும். சுய ஜாதகத்தை பார்த்து முடிவு செய்வது அவசியம். வேலை இழந்தவர்களுக்கு அல்லது வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும்.உங்கள் கனவுகள் நிறைவேறும் ஆனந்தமான நேரம். மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கும்.உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிர் கட்சியினர் விலகிச் செல்வார்கள். வெளி உலகத்திற்கும், கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். அரசியலில் புகழையும் செல்வாக்கையும் பெற்று குடும்பத்தை மறந்து மனைவி குழந்தைகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

பரிகாரம்

தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் சரபேஸ்வரரை 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் பலிக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும். திருச்செந்தூர் முருகனை வழிபட வழக்குகள் சாதகமாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406