துலாம் 
துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

துலாம்: ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2026

மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

நேர்மையான துலாம் ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்குள் கேது பகவானும் நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.

சுகஸ்தான ராகுவின் பொது பலன்கள்

நான்காமிடம் என்பது சுகஸ்தானம். வீடு, வாகனம், மனை, தாய், கால்நடைகள், தாய் வழிச் சொந்தம் போன்றவற்றை பற்றி கூறும் இடம். ஜெனன கால ஜாதகம் சாதகமாக இருந்தால் இரட்டிப்பு பலன் நடக்கும். உங்கள் அந்தஸ்து கெளரவத்திற்கு ஏற்ற ஆடம்பர வீடு கட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான சுக போக ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய சொகுசு ஆடம்பர கார் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் லட்சியம் கனவு பலிதமாகும். ஒரு சிலருக்கு திருமண வரதட்சணையாக இவை அனைத்தும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சீரடையும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆலோசனையும், நல் ஆசியும் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு மேம்படும். எதிர்ப்புகளை சமாளித்து ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியலை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மிகும். கடின உழைப்பாளிகளை, நியயவாதிகளை ராகு, கேதுக்கள் கடினமாக சோதிக்க மாட்டார்கள். எனவே திட்டமிட்டு கவனமாக செயல்பட சோதனைகள் சாதனைகளாகும்.மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(5.12.2026 முதல் 12.4.2027 வரை)

துலாம் ராசிக்கு 2,7ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் கணவன் மனைவியிடம் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் தலையீட்டால் கருத்து வேறுபாடு மிகுதியாகி நிம்மதி குறையும். ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு அதிகமாகி விவாகரத்து வழக்கு போடுவார்கள். நன்றாக வாழ்ந்த பல தம்பதிகளின் தவறான நட்பால் ஒன்றாக இருந்த குடும்பம் இரண்டாகும். சில கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மேல் வரதட்சனை வழக்கு பதிவாகும். சிலருக்கு எப்பொழுதோ பதிவான வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வந்து தண்டனை உறுதியாகும். கோட்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் கோர்ட், கேஸ், போலீஸ்டேசன் செல்லாமல் சமரசமாக பேசி பிரச்சனையை முடிப்பது புத்திசாலித்தனம். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். சம்பந்தமில்லாத நபர்களிடம் குடும்ப விஷயங்களை பேசக்கூடாது.

திருவோணம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(13.4.2027 முதல் 18.12.2027 வரை)

துலாம் ராசிக்கு பத்தாம் அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் வீரமும், விவேகமும் அதிகமாகும். மனக் குழப்பம், மன பயம் மற்றும் திட்டமிடுதலில் ஏற்பட்ட தவறுகளை சீர் செய்வீர்கள். செய்தி மற்றும் பத்திரிக்கைக் துறையினருக்கு புத்தியை தீட்டி சம்பாதிக்க உதவும் காலம். ஊடகங்களில் பணிபுரிவர்கள் ஏற்றம் பெறும் காலம். வேலையாட்கள் நேரத்திற்கு வேலைக்கு வராமல் பணிகள் தேங்கிப் போகும். எனினும் அதிக அளவில் முதலீடு போடும் கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாம். அதிக மூதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன்படுத்தினால் முதலீட்டை காப்பாற்றலாம். இதன் மூலம் சிலர் இழப்புகளை தவிர்க்கலாம்.

உத்திராடம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.12.2027 முதல் 24.6.2028 வரை

துலாம் ராசிக்கு லாப ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது. கடன் வாங்கக் கூடாது. புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளிகளின் ஒத்துழைப்பு உற்பத்தியையும், அதன் தரத்தையும் உயர்த்தும். சிலர் பழைய கூட்டு தொழிலில் இருந்து பிரிந்து சுய தொழில் துவங்குவீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்பும் கிடைக்கும். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். சிலர் மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். சுய தொழில் வளர்ச்சி சீராக நடக்கும். கூட்டம் கலை கட்டும். காசு கொட்டி வைக்க கல்லாவில் இடம் பத்தாது. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வம்பு வழக்கு வராது.

தொழில் ஸ்தான கேதுவின் பலன்கள்

இரு வேறு மனநிலையில் செயல்படுவீர்கள். திடீர் திடீரென்று முடிவினை மாற்றி செயல்படுவீர்கள். சில நேரங்களில் அவை நன்மையாகவும் பல நேரங்களில் தீமையாகவும் முடிந்து விடும். எத்தகைய தடைகளையும் தாங்கி நிற்கும் மன உறுதி கூடும். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கை இவர்களுக்கு வரமாக அமையும்.கடின உழைப்பு, சிக்ன நடவடிக்கை, தவறாத நீதிநெறி, தன்மானம் காத்தல் போன்ற நற்குணங்களால் தன் வாரிசுகளுக்கு புண்ணிய பலன்களை மிகுதிப்படுத்துவார்கள். நிறைந்த கல்வி சமுதாய ஒழுக்கம், நிர்வாகத் திறன் பிறரை அனுசரித்து செல்லுதல் போன்ற உயர்ந்த பண்புகள் அதிகமாகும். உழைப்பிற்குரிய பலன் கிடைக்க தாமதமானாலும், இறுதியில் நிலையான வெற்றியும் அந்தஸ்தும் கிடைக்கும். வாழ்க்கையில் எந்தவொரு விஷயமும் உடனடியாகக் கிடைக்காமல், கடின உழைப்பு மற்றும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே கிடைக்கும். தொழில் ஸ்திரத்தன்மை, உண்டாகும். அரசாங்க வேலை, நிர்வாகப் பொறுப்பு, நீதித்துறை, அல்லது சட்டம் தொடர்பான தொழில்களில் இருப்பவர்களின் திறமை பளிச்சிடும்.கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(5.12.2026 முதல் 14.8.2027 வரை)

துலாம் ராசிக்கு 9,12 ஆம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் விரும்பிய வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பாஸ்போர்ட் விசா சார்ந்த பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு சுகர், பிபி போன்ற நீண்ட நாள் மருத்து சாப்பிடும் நோயின் அறிகுறி தென்படும். வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம். நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்க நேரும்.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(15.8.2027 முதல் 22.4.2028 வரை)

துலாம் ராசிக்கு 4.5ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் சொந்த வீட்டில் இருந்த சிலர் வாடகை வீட்டிற்கு செல்ல நேரும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு செல்லலாம். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசை நடந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அறிவாளர்களை சந்தித்து உபதேசம் பெறும் காலம். ஜோதிடம் கற்க ஏற்ற காலம். ஒரு சிலர் மாந்தரீகம், சித்து வேலை போன்ற மனத்தால்,புத்தியால் பெறக்கூடிய வித்தைகளில் ஈடுபடுவார்கள். பகுத்தறியும் திறனற்ற இளம் பருவத்தினர் இந்த காலகட்டத்தில் தான் காதல் வலையில் சிக்குவார்கள். பலர் அமைதியை கடை பிடித்து முக்தியை தரும் ஆன்மீக மார்க்கத்தில் ஆர்வம் காட்டுவார்கள். சிலர் வயது முதிர்ந்த காலத்தில் பூர்வீகத்தில் வந்து செட்டிலாகுவார்கள்.

புனர்பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (23.4.2028 முதல் 24.6.2028 வரை)

துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்கி வீண் ஆபத்தை வரவழைக்காமல் உண்மையான தேவைக்கு அரசு வங்கிகளின் உதவியை நாட வேண்டும். பண ஏமாற்றம், இழப்பு ஏற்படும் காலம். சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவது போன்ற எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. சிலர் தனிமையாக வாழ விரும்புவார்கள். சிலர் அமைதிக்காக குறுகிய காலம் வெளிநாடு சென்று தங்கி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்

சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT