சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

கம்பீரமான சிம்ம ராசியினரே இதுவரை ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் இனி ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார்.அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

பாக்கிய குருவின் பொது பலன்கள்:

சிம்ம ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான குரு பகவான் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார். இதனால் அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் அவமானம் விலகும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு புதுமை படைப்பீர்கள். உங்கள் மனதிலும் உள்ளத்திலும் நேர்மறை சக்தி குடிபுகும். தெய்வீக ஆற்றல் நிரம்பப் பெற்று உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.உங்களைப் பற்றிய அவதூறு வார்த்தைகள் பேசியவர்கள் உண்மையை உணர்ந்து வருந்துவார்கள். சம்பந்தமில்லாமல் உங்கள் மேல் பதிந்த நீதி மன்ற வழக்குகளில் திருப்புமுனையான தீர்ப்புகள் உங்களை மகிழ்விக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு பாக்கிய ஸ்தானம் செல்வதால் அபரிமிதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வாழ்க்கையின் சூழ்நிலை மாற்றத்தை எண்ணி வியப்பீர்கள். அதிர்ஷ்டத்தை நாம் தேடிச் செல்லக்கூடாது, அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வர வேண்டும் என்பதை உணர்வீர்கள். வேலைப் பளுவினால் ஏற்பட்ட அழுத்தம் விலகும். குறைவான உழைப்பில் நிறைவான வருமானம் கிடைக்கும்.மிகச் சிரமமான பணிகளைக் கூட மிகச் சாதாரணமாக நிகழ்த்திக் காட்டுவீர்கள். வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் இந்த ஓராண்டுக்குள் நடந்து முடியும். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் பலம் பெறுவதால் கண்டகச் சனியின் அசுப பலன்கள் மட்டுப்படும். வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கும் அற்புதமான காலமாக இது அமையும் என்றால் அது மிகையாகாது.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

மேஷ ராசியில் நிற்கும் குருவின் ஐந்தாம் பார்வை ராசியில் பதிகிறது. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தோற்றம் பொழிவு பெறும். சாதனை புரியக்கூடிய வகையில் திறமைகள் கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் வசந்தம் வீசும்.மனக்குழப்பத்தோடு இருந்தவர்கள் தெளிவோடு சிந்திப்பீர்கள். பிறருக்கு பயன்தரும் ஆலோசனை சொல்லக் கூடிய வகையில் உங்கள் திறமைகள் அதிகரிக்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். உங்களின் செயல்பாட்டில் பிறரின் குறுக்கீடுகள் இருக்காது. ஆழ்ந்த சிந்தனையால் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளால் நாளை நடக்கப் போவதை இன்றே உணரும் பேராற்றல் உருவாகும்.ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பதால் சுய ஜாதகத்தில் பலவீனமான தசை, புத்தி நடந்தால் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் நோக்கிச் செல்வார்கள்.

ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப் போகிறது. குருவின் ஏழாம் பார்வை பலன்கள் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய வீரிய, சகோதர ஸ்தானத்தில் குருவின் ஏழாம் பார்வை பதிகிறது.புதிய புதிய சிந்தனைகள், யுக்திகள் தோன்றும். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.உயரிய சிந்தனைகள் வெற்றியைக் கொடுக்கும்.சிலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்கும்.சகோதர சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை சீராக்குவீர்கள் காது, மூக்குத் தொண்டை தொடர்பான நீண்ட நாள் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். அடமானத்தில் இருந்த அசையாச் சொத்துக்கள் மற்றும் நகைகளை மீட்பதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் பூர்வ புண்ணிய பாக்கிய பலத்தால் இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து சுப பலன்களும் உங்களை நாடி வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும் தலைமைப் பதவிகளும் தேடி வரும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வந்து நிற்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். புகழ் அந்தஸ்து, கவுரவம் உயரும். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்புகள் உள்ளது.வாகன வசதிகளை பெருக்கி கொள்வீர்கள்.இளம் பருவத்தினருக்கு புத்திர பேறு கிடைக்கும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப காரியம் செய்து மகிழ்வீர்கள்.சிலருக்கு புதியதாக காதல் எண்ணம் மலரும்.மனதை மகிழ்விக்கும் அனைத்து சுபநிகழ்வுகளும் நடக்கும்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு மூன்றில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விடா முயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் ஒருவராகவே தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.இடப்பெயர்ச்சி செய்ய நேரும். ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் சீராகும். காணாமல் போன அல்லது கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். உயில் எழுதலாம். உயில்களில் திருத்தம் செய்யலாம்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

சிம்ம ராசிக்கு மூன்று, பத்தாம் அதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய வங்கி கணக்கு துவங்கலாம். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். இந்த குருப்யெர்ச்சியால் தொழில் தொடர்பான அனைத்து இடர்பாடுகளும் நீங்கி நிம்மதி பெறும் சாதகமான நேரம். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

ராசி அதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் செய்வினை, கண் திருஷ்டி தோஷங்கள் அகலும். உற்றார் உறவுகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். நல்ல வாழ்வியல் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். வேலைக்காக இடம் விட்டு இடம் அல்லது ஊர் விட்டு ஊர் மாற நேரும். வீட்டிலும், வெளி இடத்திலும் உங்களை ஓரம் கட்டியவர்கள் இனிமேல் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அந்தஸ்து எல்லாம் உயரும்.

குருவின் வக்ர பலன்கள்:

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் எதிர்பார்ப்புகள் ஒன்றிரண்டு நிறைவேறாமல் போகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். மன அமைதி குறையும் சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளதால் திட்ட மிட்டு செயல்படுவது நல்லது.

பெண்கள்:

ஆரோக்கியத் தொல்லைகள் சீராகும். அறுவை சிகிச்சை வரை சென்ற கருப்பைத் தொல்லை மாற்று முறை வைத்தியத்தில் சீராகும்.சகோதர, சகோதரி உறவில் மறுமலர்ச்சி உண்டா கும். தாய் வழிச் சொத்தும், சீதனமும் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு பிரமாண்ட தொழில் வளர்ச்சி உண்டு. உங்கள் முயற்சிக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டினரின் ஒத்துழைப்பு இருக்கும்.

மாணவர்கள்:

ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் அன்றைய பாடத்தை அன்றே படிப்பதால் சுமையாக இருக்காது. ராசி, மூன்றாமிடம், ஐந்தாமிடத்தை குரு பார்ப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கல்வி தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர வாய்புகள் உள்ளது. அன்பும், பொறுமையும், நிதானமும் கல்வியில் உள்ள பற்றும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளமாக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

இதுவரை வேலையின்மையால் அவதிப்பட்ட வர்களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும். உத்தியோக உயர்வை எதிர் பார்த்தவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு .அரியர்ஸ் சம்பளம் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைக்கும். உடன்வேலை பார்த்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை ,கெளரவக் குறைவு போன்ற பிரச்சனைகள் அகலும்.

பரிகாரம் : விடா முயற்சியோடு செயல்பட்டால் வெற்றி தேடி வரும் என்ற அனுப உண்மையை இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு உணர்த்தும். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் ஆத்மார்த்தமான முன்னோர்கள் வழிபாடு உங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஜென்ம நட்சத்திர நாளில் வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவ பாக்கிய பலம் பெருகும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406