சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

சிம்மம்- தொழில் குரு 60%

எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் சிம்ம ராசியினரே!

இதுவரை 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்று பாக்கிய பலன்களை வழங்கிய குருபகவான் மே1, 2024 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானம் செல்கிறார்.2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் ராசிக்கு 7ல் சம சப்தமாக நின்று கண்டகச் சனியின் பலனை வெளிப்படுத்துகிறார்.

தொழில் குருவின் பொதுபலன்கள்:

10ல் குருவந்தால் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழமொழி. 10ம்மிடத்தில் குரு வருவதால் பதவி தொழில் பற்றிய மனக் கலக்கம் சிம்ம ராசியினருக்கு ஏற்படத்தான் செய்யும். சிம்ம ராசியினருக்கு குரு 5,8ம் அதிபதி. அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. 5ம் அதிபதி குரு 10ல் வருவது சுபம். அதே நேரத்தில் அஷ்டமாதியான குரு 10ல் வருவது சில அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம்.தொட்டது துலங்கும்.நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

இக்கால கட்டத்தில் தடைபட்ட குல தெய்வ வழிபாடு, ஆன்மீக சுற்றலா மேற்கொள்ள ஏற்ற காலம். ஒப்பந்த அடிப்படையிலான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். வீடு, வாகனயோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

தொழில் ஸ்தானத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. அங்கே கேதுவும் நிற்கிறார் என்பதை மறக்கக்கடாது. சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும். அதனால் சிறு பொருள் விராயங்கள் தடை தாமதம் ஏற்படும். மற்றபடி பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு.

பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். கண்டகச் சனியின் தாக்கம் இருப்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது முக்கியம்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

தொழில் குருவின் சம சப்தம பார்வை 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும் .உங்கள் எண்ணம் போல் வீடு அமையும். சிலர் வீட்டை திருத்தி அமைக்கலாம். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2, 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். நீங்கள் வாங்கும் வீடு, மனை இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையா சொத்துக்கள் வாடகைக்கு போகும். அதன் மூலம் வருமானம் உருவாகும்.

தாயாருக்கு ஏற்பட்ட சிறு, சிறு உடல் நலக் குறைவு செம்மையாகும். குடும்பத்தில் எல்லோரும் அனுசரணையாக இருப்பார்கள்.உடல் உபாதைகள் அகலும். வைத்தியம்பலன் தரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவின் 9ம் பார்வை பதிகிறது. மறைமுக எதிர்ப்புகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.புகழ் கொடிகட்டிப் பறக்கும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். விரோதிகள் நண்பர்களாவார்கள்.

தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும்.

வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.தொழில் உத்தியோகம் தொடர்பான விசயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். நோய் தாக்கம் குறையும்.சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன்பட நேரும்.

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை):

ராசி அதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிலவிய இடையூறுகள் தடை, தாமதங்கள் அகலும். இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்கள் புகழ், அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, சொல்வாக்கு வளரும். சோதனைகள் சாதனைகளாகும். முயற்சிகள் பலிதமாகும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்.

அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். பொருளாதார முன்னேற்றத்தால் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை):

விரயாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். மன சஞ்சலத்தால் தூக்கம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை 5.2.2025 முதல் 15.5.2025 வரை):

சிம்ம ராசிக்கு 4, 9ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் நன்மைகள் மிகுதியாகும். தடைபட்ட அரைகுறையாக நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும்.குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உங்கள் மீது பதிந்த வீண் சங்கடங்கள் அவமானங்கள் பழிச் சொற்கள் நீங்கும். புதிய நம்பிக்கை பிறக்கும் புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால தேவைக்கு இப்பொழுதே சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறக்கும்

குருவின் வக்ர காலம்(சிம்ம ராசிக்கு 4, 9ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் இந்த காலத்தில் எண்ணியதை குறித்த நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் போகலாம். கணவன்-மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் குறையும்.தாய், தந்தையை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம்.

விரயாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருள் கொடுக்கக் கூடாது. வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு உடல் நலனை பாதுகாக்க வேண்டும்.

மாணவர்கள்:

குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்.சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர், மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளும் பதக்கங்களும் வாங்கி குவிப்பார்கள்.

பெண்கள்:

பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் புதுமை புகுத்தி நன்மதிப்பை பெறுவீர்கள். 2ல் கேது, 8ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கும். அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். திருமணமான பெண்கள் சஷ்டி திதியில் முருகனுக்கு சந்தன அபிசேகம் செய்து வழிபட ஆண் வாரிசு உண்டாகும்.

 பரிகாரம்:

தொழில் ஸ்தான குருவின் சுப பலன்களை அனுபவிக்கவும் 2ம்மிட கேது 8ம்மிடராகுவின் சங்கடங்களில் இருந்து விடுபடவும் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளி போன்ற ராகு அம்சம் நிறைந்த தெய்வங்களுக்கு குங்கும அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.