மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

மிதுனம்- 2026 புரட்டாசி மாத ராசிபலன்

தொழில் முன்னேற்றம், புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சி போன்றவை கைகூடும்.

மிதுன ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்று சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே செயல்களில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். தொழில் முன்னேற்றம், புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சி போன்றவை கைகூடும். உங்கள் ராசியில் செவ்வாய் இருப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எனவே துணிந்து சில காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் தொழிலில் கவனம் தேவை.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 6-ம் இடத்திற்கு அதிபதி நீச்சம் பெறுவதால் எதிரிகளின் பலம் குறையும். இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஆனால் 11-ம் இடத்திற்கும் செவ்வாய் அதிபதி என்பதால், இக்காலத்தில் திடீர் திடீரெனப் பணநெருக்கடி அதிகரிக்கும். வெளிநாட்டில் குடியுரிமைக்காக காத்திருப்பவர்களுக்கு அது கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இக்காலத்தில் குல தெய்வ வழிபாடும், அங்காரக வழிபாடும் அவசியம் தேவை.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர். புதன். அவர் புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கின்றார். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்வதன் மூலம் இனிய பலன் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கட்டிடம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் உடன்பிறப்புகள் மும்முரம் காட்டுவர். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் வேறு இடத்தில் பணிபுரிய வாய்ப்புகள் வரலாம். என்றாலும் பழைய இடத்திலேயே இருப்பது நல்லது. அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பர்.

மீன-சனி

இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால் நோய் நொடிகள் அகலும். புதிய முயற்சிகளில் திடீரென வெற்றி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய நண்பர்கள் வழி கூறுவர். அதேநேரம் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி இருப்பதால் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் குறுக்கீடுகள் வரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கநிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றம் கூடும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதார நிலை திருப்தியைத் தரும். வரன்கள் முடிவாகும்.

SCROLL FOR NEXT