ராசிபலன்

சிம்மம்- 2026 சித்திரை மாத ராசிபலன்

குடும்பத்திற்கு கோடி நன்மைகள் உண்டாகும்.

சுய கவுரவம் விரும்பும் சிம்ம ராசியினரே!

பிறக்கப் போகும் சித்திரை மாதம் உங்களின் ராசி அதிபதி சூரியன் 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல போகிறீர்கள். இதனால் லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

எதிர்பார்த்த சில முக்கிய திருப்பங்கள் உங்கள் வாழ்வில் உண்டாகும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. சிலருக்கு மதம் மாறும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும். எதிரிகளின் தொல்லை குறையும்.

குடும்பத்திற்கு கோடி நன்மைகள் உண்டாகும். ஒரே வீட்டில் வசித்தும் ஒருவருடன் மற்றொருவர் பேசாமல் ஆளுக்கொரு தீவாக மொபைலுடன் வாழ்ந்த நிலை மாறும். குடும்பம் மகிழ்ச்சியாக மாறும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். அனைவரும் விட்டுக் கொடுத்து இயல்பாக வாழ்வீர்கள்.

ஈகோ குறையும். சொல்வாக்கால் செல்வாக்கு உயரும். குடும்ப சந்தோஷமாக இருக்கும். கூடி வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை உணர்வீர்கள். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களள், வேற்று மதத்தவரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். திருமணத்திற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

சிலர் காதல் திருமணத்தால் அவமானப்பட வாய்ப்பு உள்ளது. ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு அஷ்டம சனியால் எந்த பாதிப்பும் இருக்காது.வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்‌. உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.மாணவ மாணவிகள் கவனித்து படித்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

தொலைந்த, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நேரத்திற்கு சத்தான உணவாக நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுத்தால் எந்த வியாதியும் அண்டாது.வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பொருளாதாரம்

தன ஸ்தானமான இரண்டாம் இடத்தின் அதிபதி புத பகவான் நீச்சம் பெற்றாலும் குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதாரத்தில் தடையில்லாத வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும்.

தொழில் வளர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், உணவுத் தொழில் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.விரும்பிய கடன் தொகை கிடைக்கும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் என சுப செலவுகள் மிகுதியாக இருக்கும்.

பெண்கள்

கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மனதிற்கும் நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பச் சுமை சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உள்ளது.பிறந்த வீட்டு சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் உங்களை கவுரவப்படுத்தும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பிள்ளைகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு வெகு விரைவில் குருப் பார்வை கிடைக்கப் போவதால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

எதிர்பார்த்த சம்பளத்தில் மனதிற்கு பிடித்த நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும்.இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். வேலை மாற்றம் செய்பவர்கள் அப்பாயின்மென்ட ஆர்டர் வாங்கிய பிறகு பழைய வேலையை விட வேண்டும்.

சிலர் பழைய வேலையில் இருந்து விடுபட்டு புதிய வேலைக்கு செல்லலாம். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். முக்கிய தேவைகளுக்கு எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசுப்பணி, வெளிநாட்டுப் பணி போன்ற விருப்பங்கள் நிறைவேறும்.

மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது.

முதலீட்டாளர்கள்

பூர்வீக குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். தொழிலில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். மிகுதியான லாபமும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். சனியின் நிலை சற்று சாதகமற்று இருப்பதால் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சிலர் குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சித்து சட்டத்தின் பிடியில் சிக்கலாம்.குரு விரய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் முக்கியப் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.புதியதாக தொழில் துவங்குபவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் நடத்தலாம்.

அரசியல்வாதிகள்

லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள்தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கட்சியில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.

கவனமாக செயல்பட வேண்டிய காலம். சனி+செவ்வாய் சேர்க்கை.. ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.

உயில் பிரச்சனை தலை தூக்கும்.

ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயில், ஆவணங்களில் சிலர் திருத்தம் செய்வார்கள். பாகப் பிரிவினையில் மன பேதம் மிகுதியாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள். சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும்.

கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் குடித்தனம் செல்லலாம். அதிக வேலையினால் மனஅழுத்தம் அதிகமாகும். மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு செல்லலாம்.

உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். வெற்றி கை நழுவும் , புகழும் மரியாைதையும் குறையும். நிம்மதிக்கு வழி இருக்கிறதா என்ற சிந்தனை மேலோங்கும்.தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்

சித்ரா பௌர்ணமி அன்று சூரிய ஓரையில் வில்வ அர்ச்சனை சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை சிவனையும், சக்தியையும் வழிபட அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406