மகரம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகரம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

சில பிள்ளைகளின் காதல் பிரச்சனைகள் பெற்றோரை நோகடிக்கும்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மகர ராசியினரே...

மகர ராசிக்கு சனி பகவான் ராசி அதிபதி மற்றும் தனஸ்தான அதிபதியாக பலன் தருவார். தற்போது கோச்சாரத்தில் 27.7 2026 முதல் 10.12.2026 வரை வக்கிரமடைகிறார்.ராசி அதிபதியாக இருந்தாலும் ஜாதகரின் சொந்த முயற்சியில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டிய காலம்.இந்த வக்ர காலகட்டங்களில் குரு பார்வை சில மாதங்களுக்கு ராசியில் பதிவது ஆறுதலான விஷயமாகும். குடும்பத்தில் அசாதரண சூழ்நிலை நிலவும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் வரும். இந்த காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்த வேண்டும்.களவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். வங்கியில் உள்ள சேமிப்புகள் கரையும். பிறர் மீது பரிவு மிகுதியால் போட்ட ஜாமீன் தொகைக்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை வரும். உயில்கள், பத்திரங்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை கை மறதியாக வைத்து விட்டு தேடிக் கொண்டே இருப்பீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையே நிலவும். வெளிநாட்டிற்கு சென்றவர்கள் திரும்பவும் அங்கிருந்து தாய் நாடு வர முடியாமல் சட்ட சிக்கல், நெருக்கடி ஏற்படும். அதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பணி நிமித்தமாக வெளிநாடு சென்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குரு பார்வை இருப்பதால் பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்கும். சிலருக்கு வயது வித்தியாசம் அதிகம் உள்ள வரனே அமையும் அல்லது தகுதி குறைவான (படிப்பு, ஊதியம்.பதவி) வரனே அமையும். சிலர் வாழ்க்கைத் துணையை அடக்க முயன்று முடிவில் தானே அடங்கிப் போவார்கள். சுகர்,BP போன்ற பரம்பரை வியாதிகள் ஆரம்பமாகும்.வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படும். பொருள் விரயம் மற்றும் மன உளைச்சல் மிகுதியாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை. சில பிள்ளைகளின் காதல் பிரச்சனைகள் பெற்றோரை நோகடிக்கும். சில பிள்ளைகளின் உயர்கல்விக்கு மிகுந்த பொருள் விரயம் உண்டு.மதமாற்ற சிந்தனை மேலோங்கும் அல்லது கடவுள் நம்பிக்கை குறையும். சிலர் மன சஞ்சலத்தால் தெய்வத்தை பழிப்பார்கள். பூர்வீகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில் சற்று கால தாமதம் எற்படும்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம்:

(27.7.2026 முதல் 9.10.2026 வரை) மகர ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தன ஸ்தான அதிபதியான சனி பகவான் 6,9ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் வக்கிரகதியில் சஞ்சரிக்கும் காலம் இடப்பெயர்ச்சி நடக்கும். வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும்.எப்போதோ செய்த தவறுக்கு இப்பொழுது சிறை தண்டனை அனுபவிக்க நேரும் அல்லது வீட்டுச் சிறையில் இருக்க நேரும். விரயம் என்பது முடிவாகிவிட்ட ஒன்று என்பதால் இந்த வக்ர காலத்தை சாதகமாக பயன்படுத்தி வீடு, மனை,வாகனம், கல்யாணம்,நகை என்று சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தானே இருக்கிறது. ஆன்ம பலம் குறையும். வெளிநாடு அல்லது வெளி மாநில வேலை கிடைக்கும். இதுவரை கண்டிப்புடன் இருந்த உங்களின் தந்தை உங்கள் மேல் அன்பு காட்டுவார். தாய், தந்தை,மத குருமார்கள் மற்றும் மகான்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.

அரச தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு தண்டனை காலம் ரத்து செய்யப்படும். ஆயுள் பலம் உண்டு.ஜனன காலத்தில் மாரகதசை நடந்தால் கடனால் கவலை நோய் தாக்கம் மிகும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும்.

சனி பகவான்

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை) மகர ராசியின் அதிபதியான சனி பகவான் தனது சொந்த நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் தொழில் கூட்டாளி யுடன் மோதலை உண்டாக்கும்.கூட்டாளியின் சுயநலப்போக்கு உங்களை மனக்கவலையில் ஆழ்த்தும்.

தொழில் கூட்டை பிரிக்கவும் புதிய தொழில் கூட்டாளியை சேர்க்கவும் உகந்த காலம் அல்ல.பாம்பு என்று தாண்டவும் முடியாது.பழுது என்று மிதிக்கவும் முடியாது என்பதால் தொழில் சம்பந்தமாக வரவு, செலவு, பண பரிவர்தனை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்த குருப் பெயர்ச்சி வரை யாரையும் நம்பி தொழிலையோ பண விசயத்தையோ ஒப்படைக்க கூடாது இந்த சனி வக்ர பெயர்ச்சி உண்மையான நண்பர்களையும் நண்பர் போல் நடிப்பவர்களையும் உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும். இதுவரை பங்குச் சந்தை, சூதாட்டம் போன்றவற்றைப் பற்றி யோசிக்காதவர்களுக்கு கூட அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். பெரிய முதலீட்டை தவிர்க்க வேண்டும்.நிலுவையில் இருக்கும் வாடகை வருமானம் வந்து சேரும். இதுநாள் வரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் இல்லாதவர்களுக்கு சொத்து சேரலாம்.

திருமணம்

இரண்டில் ராகு எட்டில் கேது உள்ளது சர்ப்ப தோஷம் ஆகும்.ராசிக்கு குரு பார்வை இருப்பதால் ஜாதகத்தில் எவ்வளவு தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் பல வருடங்களாக தடைபட்ட திருமணம் கூட நடந்து முடியும். சிலருக்கு இன மத குல பா குபாடு இல்லாத திருமணம் நடக்கும்.

பெண்கள்

சோம்பலும் மறதியும்,கோபமும் மிகுதியாகும். ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் உணவு, தானியங்களை உண்ண வேண்டும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கெளரவிக்கலாம்.பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள் இரண்டில் உள்ள ராகு திருமணமான ஒருசில பெண்களை முறையற்ற நட்பில் மாட்ட வைப்பார். கவுரவமான குடும்பத்தில் பிறந்து நேரம் கெட்டு வேலைக்கு சென்று தவறான காதலில் மாட்டி மனதையும் வாழ்க்கையையும் கெடுக்காமல் மிகவும் கவனமாக காலத்தை கடத்த வேண்டிய நேரம். புகுந்த வீட்டாரின் ஆதரவு மனநிம்மதி தரும். மன சஞ்சலத்தை குறைக்க ஸ்ரீ ராம ஜெயம் எழுதவும்.

முதலீட்டாளர்கள்

ஒரு சிலர் பூர்வீக குலத் தொழிலை சீர்திருத்தி தந்தையின் அன்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் மிகும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். கிரகங்களின் தன்மைக்கேற்ப செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நல்லது. மனிதர்கள் நினைத்தால் சாதிக்க முடியாது எதுவுமே இல்லை. சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வலிமையை பிரபஞ்சம் எல்லோருக்கும் தந்து இருக்கிறது.

உத்தியோகஸ்தர்கள்

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும்.ஓய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். ஆனால் நல்ல பெயர் கிடைக்காது. சங்கடங்களை தவிர்க்க நேரம் கிடைக்கும் போது சிவாலயத்திற்கு உலவாரப் பணிகள் செய்ய பெரும் நன்மை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்

பத்து ரூபாய் முதல் போட்டு ஒரு ரூபாய் லாபம் பார்த்த கதையாக இருக்கும். முக்கிய பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைக்க கடுமையாக போராட நேரும்.யார் தப்பு செய்தாலும் பழி உங்கள் மேல் தான் திரும்பும்.இந்த ஆண்டு தேர்தலில் நிற்கும் முன்பு பல முறை ஜாதகத்தை சரி பார்க்கவும். எதிரி தொல்லை மிகுதியாக இருப்பவர்கள் சத்ரு சம்ஹார ஹோமம் செய்வதுடன் காளியின் ரட்சையை கழுத்தில் அணிய ஆபத்துகள் அண்டாது.

பரிகாரம்

தினமும் பசு விற்கு இயன்ற உணவு தானம் செய்யலாம். இயன்றவர்கள் கோ பூஜை மற்றும் கோதானம் செய்து வர எதிர்பார்த்த மாற்றம் தேடி வரும். பிரதோஷ நாட்களில் சிவ வழிபாட்டை தவறாமல் கடைபிடிக்கவும்.