வாழ்க்கையின் உண்மை புரிந்த மகர ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் சம சப்தம ஸ்தானத்திற்குள் கேது பகவானும் ராசிக்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
ஜென்மத்தில் ராகு என்றவுடன் ஆழ்மனதில் கலக்கம் தோன்றும். ஜென்ம ராகு ஜாதகரை நிலையிழக்க செய்வாரே என்ற பயம் உங்களை மனக் குழப்பத்திற்கு இழுத்துச் செல்லும். சனி வீட்டு ராகு என்பதால் பய உணர்வு மேலும் அதிகமாகும். சனிபகவானும் ராகுவும் கடும் பகை கிரகங்கள் என்பதால் இறை வழிபாட்டில் கவனம் செலுத்தி காலத்தை நகர்த்த வேண்டும். உங்களின் செயல்பாடுகள் புகழ் மற்றும் கெளரவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவே இருக்கும். தனித்திறமைகள் வெளிப்படும். எல்லாம் சரியாகவே நடந்தால் கூட நாம் செய்வது சரியா? என்ற இனம் புரியாத பய உணர்வு உங்களுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறு இருக்கும். ஜென்ம ராசி மற்றும் ஏழில் ராகு, கேதுக்கள் என்பதால் சர்ப்ப தோஷம் உண்டாகும். இந்த தோஷத்தால் திருமணத் தடை மற்றும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, உடல் நலக் குறைவு, கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் எழும். ஜனன கால ஜாதகத்தில் தற்போது நடைபெறும் தசாபுத்திக்கு ஏற்பவே சுப அசுப பலன்களின் பாதிப்பு இருக்கும் என்பதால் பயப்பட தேவையில்லை.
மகர ராசிக்கு 4,11ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் பல வருடங்களாக தீர்க்க முடியாமல் இருந்த பூர்வீக சொத்துதொடர்பான விசயங்கள் முடியும். உங்களுக்கு என்று ஒரு பங்கு உறுதி ஆனால் முடிவு நீங்கள் எதிர்பார்த்த வகையில் சாதகமாக இருக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் மாறலாம். ஒரு சிலருக்கு வாடகை வருமானம் தடைபடலாம் அல்லது வாடகை வருமானம் தருகின்ற கட்டிடங்களில் சட்ட சிக்கல் ஏற்படும். புதிய வீடு கட்ட அரசின் மானியம் கிட்டும். நல்ல வெளிச்சமான காற்றோட்டம் நிறைந்த பெரிய வீடு கட்டி மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு பழைய வீட்டை புதிப்பிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவான நான்கு சக்கர வாகன கனவு நிறைவேறும். வீட்டிற்கு தேவையான அழகு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு நடத்தையின் மேல் கலங்கம் ஏற்படுத்தும் விதமான அவப்பெயர் தேடி வரும்.
மகர ராசிக்கு சம சப்தமஸ்தான அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் திருமணத் தடை அதிகரிக்கும். தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக சிலருக்கு வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் அல்லது தவறான நட்பு வலையில் மாட்டலாம். ஏழரைச் சனியின் காலத்தில் நீதி மன்ற படி ஏறியவர்களுக்கு இப்பொழுது விவகாரத்து கிடைக்கும். மன நிம்மதிக்காக ஊரை விட்டு, மாநிலம் விட்டு தொலைதூரம் செல்லும் நிலை ஏற்படும். சிலர் துன்பத்தாலும் துயரத்தாலும் வெறுப்படைந்து சன்னியாசம் வாங்குவார்கள் அல்லது தலைமறைவு வாழ்க்கை வாழ நேரும். உற்றார் உறவினர்களுக்கு ஜாமீன் போட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படும்.
மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் இடமாற்றம் செய்ய நேரும். அலைச்சல் மிகுதியான பயணங்கள் அதிகம் உண்டாகும். இடப்பெயர்ச்சியால் சீதோசன ஒவ்வாமை ஏற்பட்டு விடாமல் சளி, காய்ச்சல், இருமல்,மூக்கடைப்பு போன்ற சுவாச கோளாறுக்கு நீண்ட நாள் வைத்தியம் செய்ய நேரும். இளைய சகோதரருக்கும் உங்களுக்கும் பத்திரம், ஆவணம் தொடர்பான சட்ட சிக்கலை சந்திக்க நேரும். உங்களின் சகோதரர் போட்ட ஜாமீன் பொறுப்பிற்கான கடனை நீங்கள் அடைக்க நேரும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் வாங்க நேரும். எப்பொழுதோ நடந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வந்து சிறை தண்டனை அனுபவிக்க நேரும்.
ஏழாமிடத்தில் உள்ள கேது உங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைப்பார். தொழில் மாற்றம் வரலாம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். சில நேரங்களில் பணம் வராது. அல்லது கையில் பணம் தங்காது. அளவில்லாத செலவால் சேமிப்பு கரையும். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். கேது பிரிவினை மற்றும் வம்பு வழக்கின் மொத்த குத்தகைதாரர் என்பதால் திருமணம் சற்று காலதாமதமாகும். திருமணமான இளம் தம்பதியினருக்கு கருத்து வேறுபாடும் மனப் போராட்டமும் மிகுதியாகும். கூட்டுக் குடும்பங்கள் பிரிவினையாகும்.தொழில் கூட்டாளிகளால் கருத்து வேறுபாடு ஏற்படும்.எந்த செயலையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட நலம் உண்டாகும்.
மகர ராசிக்கு 6,9ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் தொழில் தொடர்பான புதிய புதிய ஞானம் மற்றும் அனுபவங்களை கேதுவின் மூலம் கற்றுக் கொள்ள நேரும். அதிக நேரம் கடுமையாக உழைக்க நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு உழைத்தாலும் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மேலோங்கும். சொந்த தொழில் செய்பவர்களால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். தொழில் கூட்டாளிகள்பிரிந்து செல்வார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பதில் சட்டச் சிக்கல் மிகுதியாகும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு முதலாளி ஆசை போய் உத்தியோகத்தில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் வெறுப்பு ஏற்பட்டவர்கள் சொந்த தொழிலில் விருப்பம் காட்டுவர்கள்.
மகர ராசியின் அதிபதி மற்றும் தனஸ்தான அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உடல் நிலையிலும் மன நிலையிலும் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக போராடுவீர்கள்.வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். வரவு, செலவு வழக்கம் போல் இயல்பாக இருக்கும். வராக்கடன்கள், நிலுவை சம்பளம் வசூலாகும். குடும்பத்தின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள்.உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதத்திலிருந்து சற்று விலகிச் செல்லவும். ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கையில் எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். பொறுப்புடன் நடந்து கொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் மகர ராசியினருக்கு வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கும். மனிதன் ஆன்மீக உணர்வோடு தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து முக்திக்கு வழி தேட வேண்டுமா? அல்லது சிறு பணத்தை பெரும் பணமாக்க முயற்சித்து மறுபிறவியில் உழல வேண்டுமா? என்பதை உணர்த்தும். திடீர் அதிர்ஷ்டம், லாட்டரி, உயில் சொத்து மூலம் எதிர்பாராத தன வரவு ஏற்படும். சிலருக்கு சட்டத்திற்கு புறம்பான வழியில் பணம் வந்து சேரும். பணத்துடன் வம்பு வழக்கும் சேர்ந்து வரும். வழக்கின் சாதகத்திற்கு எந்த குறுக்கு வழியையும் நாடி வழக்கை முடிப்பீர்கள்.உங்களின் மூத்த சகோதரரின் ஆரோக்யத்தில் அதிக கவனம் வேண்டும்.
ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.முறையான துர்க்கை வழிபாடு ஜென்ம ராகு, ஏழாமிட கேதுவின் தாக்கத்தை குறைத்து சுப பலனை மிகுதிப்படுத்தும்.