மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

மகரம்- 2026 புரட்டாசி மாத ராசிபலன்

நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் பொழுது, குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள்.

மகர ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். இருப்பினும் சனி பகவானை குரு பார்ப்பதால், முயற்சிகளின் முடிவில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப்பாதையில் பிரச்சினைகள் வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. எதையும் திறம்படச் செய்து வெற்றிகாணும் நீங்கள், இம்மாதம் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுவது நல்லது. நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் பொழுது, குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள். சனி வக்ர நிவர்த்தியாகும் வரை கொஞ்சம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறும் போது, தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமியால் பிரச்சினைகள் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வரக்கூடிய லாபத்தில் பங்குதாரர்களின் குறுக்கீடு ஏற்படும். லாபம் ஏட்டில் இருந்தும் எதிரில் இருக்காது. கூட்டு முயற்சியில் இருந்து தனித்து இயங்க முற்படுவீர்கள். 'கொடுக்கல் வாங்கல்களில் யாரையும் நம்பி செயல்பட முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உடல்நலனில் கவனம் தேவை. வெப்ப நோய்க்கு ஆட்பட நேரிடும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையலாம். வியாபார விரோதங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கு 6. 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் தான். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழில் கூட்டாளிகள் இணைந்து செயல்படுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். கட்டிடம் கட்டுவது அல்லது வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இக்காலத்தில் குரு மங்கலயோகமும் செயல்படுவதால் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு நடைபெறும். உடன்பிறப்புகளுக்கோ, உங்களுக்கோ திருமண முயற்சி நடந்தால், அது கைகூடும். புதிய முதலீடுகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நட்பாலும் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் கேட்ட உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும் நேரம் இது. புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணி அமையும்.

மீன - சனி

மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ர இயக்கத்தில் உள்ளார். அவரை கடகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் பார்க்கின்றார். இதனால் ஓரளவு நன்மை கிடைக்கும். என்றாலும் உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். 'நினைத்ததை செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் புரிந்து கொள்ளாமல் பிரச்சினைகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுசரிப்பு குறையும். கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வரவை விடச் செலவு கூடும். புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

SCROLL FOR NEXT