பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் கேது சஞ்சரிக்கிறார். மேலும் மாதத் தொடக்கத்திலேயே குருவும் மத்திற்கு வருகிறார். எனவே மிகமிக கவனமாக செயல்பட வேண்டிய மாதம் இது. அதுமட்டுமல்லாமல் அஷ்டம ஸ்தானம் வலுவடையும்பொழுது அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகக் கிடைக்கும். 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று நினைப்பீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும் வாக்குவாதங்களால் வளர்ச்சி தடைபடாமல் இருக்க எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற தெய்வீக சிந்தனையும். வழிபாடுகளும் கைகொடுக்கும்.
மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் மனக்கலக்கம் ஏற்பட்டாலும், அதன் பார்வை பலனால் ஓரளவு நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக குடும்ப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்குரிய தகவல் வரலாம். வீடு வாங்கும் முயற்சி கைகூடும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புனிதப் பயணங்கள் அமையும்.
குருவின் பார்வை 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு, செய்தொழிலில் உங்கள் திறமை பளிச்சிடும். கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலுமாக பணிபுரிந்தவர்கள் இனி ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பைப் பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று ஜென்ம ராசிக்கு வருகிறார். அங்கு ஒன்றரை ஆண்டு காலம் தங்கி இருக்கும் பொழுது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். உடன்பிறப்புகள் பகையாவர். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கலக்கம் அதிகரிக்கும். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை.
சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் அடிக்கடி பயணம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. வீடு மாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாறும் முயற்சி கைகூடும். வெளிநாடு செல்லும் முயற்சியும் நடந்தேறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடை அதிகரிக்கலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு சந்திகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது யோசித்துப் போடுவது நல்லது. மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செலவிற்கேற்ற வரவு உண்டு.